Friday 3 December 2021

எச்சரிக்கை - ஒமிக்ரோன் எல்லா இடங்களிலும் பரவியிருக்கக் கூடும்

SHARE


 ஒமிக்ரோன் கொரோனா பாதிப்பு எல்லா இடங்களிலும் பரவியிருக்கக்கூடும் என பெங்களூரு மாநகர ஆணையர் கௌரவ் குப்தா எச்சரித்துள்ளார்.


கர்நாடகத்தில் இருவருக்கு ஒமிக்ரோன் கொரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. ஒருவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் மருத்துவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதுபற்றி கௌரவ் குப்தா கூறியது : மருத்துவருக்கு நவம்பர் 22 ஆம் திகதி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நவம்பர் 24 ஆம் திகதி ஒமிக்ரோன் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் ஒமிக்ரோன் கொரோனா வகை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஆனால், அவருக்கு காய்ச்சல், உடம்பு வலி போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கின. அவர் தற்போது அடுத்தகட்ட சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

அவர் எந்தப் பயணமும் மேற்கொள்ளவில்லை. அவருடன் தொடர்பிலிருந்த 218 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 5 பேருக்கு மட்டும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது மாதிரிகள் ஒமிக்ரோன் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பங்கேற்ற ஏராளமான மருத்துவர்களுடன் இவரும் பங்கேற்றிருக்கிறார்.

ஒமிக்ரோன் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள மருத்துவர் எந்தப் பயணமும் மேற்கொள்ளாததால், இது ஏற்கெனவே எல்லா இடங்களிலும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நாம் அச்சப்படத் தேவையில்லை, அதேசமயம் கவனமாக இருக்க வேண்டும். முகக் கவசம் அணிவதும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் கட்டாயம்

யாரும் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. கொரோனா வழிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

ஒமிக்ரோன் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள மற்றொருவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 66 வயது மிக்க ஆண். அவர் பெங்களூருவில் இருந்துள்ளார். பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நவம்பர் 20 ஆம் திகதி அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் கொரோனா பரிசோதனை முடிவுகள் டிசம்பர் 2 ஆம் திகதி வெளிவந்தன. அதில் ஒமிக்ரோன் கொரோனா வகை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டார். அவருடன் தொடர்பிலிருந்த 264 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் தொடர் கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் மற்றொரு தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொண்டார். அதில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே திட்டமிட்டப்பட்ட நிகழ்ச்சிகள் இருந்ததால், அவர் பின்னர் டுபாய்க்குப் புறப்பட்டுச் சென்றார்" என்றார் கௌரவ் குப்தா.
SHARE