போராட்டத்தால் 164 பேர் பலி - 1,678 பேர் கைது

 


கஜகஸ்தான் போராட்டம் தொடர்பாக மேலும் 1,678 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைப் போராட்டங்களில் தொடர்புடையவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 1,678 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்துடன், சோவியத் யூனியனிடமிருந்து கஜகஸ்தான் சுதந்திரம் பெற்றதிலிருந்து அந்த நாடு இதுவரை கண்டிராத இந்தத் தீவிர போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 12 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ரஷியா, சீனா இடையே அமைந்துள்ள மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், வாகனங்களில் பயன்படுத்தப்படும் திரவ பெட்ரோலிய வாயுவின் (எல்பிஜி) விலை திடீரென மிக அதிகமாக உயர்த்தப்பட்டது.

இதனை எதிர்த்து கடந்த வாரம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 164 பேர் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது.

முன்னர் பாதுகாப்புப் படையினர் தரப்பில் 18 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பலி எண்ணிக்கையில் பாதுகாப்புப் படையினரின் பலி எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை.
Previous Post Next Post


Put your ad code here