புத்தாண்டு தினத்தில் வாகன விபத்துக்களால் சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழப்பு..!!!




நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 10 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பின்னவல

காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற உத்தரதேவி புகையிரதத்தில் பேலியகொட பொலிஸ் பிரிவில் வனவாசல புகையிரத நிலையத்திற்கு அருகில் காரொன்று மோதியதில் இடம்பெற்ற விபத்தில் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹபராதுவ

ஹபராதுவ பொலிஸ் பிரிவில் காலி - மாத்தறை வீதியில் சென்று கொண்டிருந்த அடையாங்காணப்படாத வாகனமொன்று வீதியில் சென்று கொண்டிருந்த நபரொருவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நபர் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு , விபத்திற்கு காரணமான சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 22 வயதுடைய ஹபராதுவ - ஹூஜூவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த நபராவார்.

ஹோமாகம

ஹோமாகம பொலிஸ் பிரிவில் ஹைலெவல் வீதியில் பயணித்த லொறியொன்று , எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 30 வயதுடைய பிங்கிரிய - பனாவௌ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹபரண

ஹபரண பொலிஸ் பிரிவில் திருகோணமலை - ஹபரண வீதியில் வேகமாக சென்று கொண்டிருந்த காரொன்று , எதிர்திசையில் வந்த பேரூந்துடன் நேருக்கு நேர் மோதியதால் இடம்பெற்ற விபத்தில் காரில் பயணித்த 27 வயதுடைய மஹரகம - வித்தியாசேகர பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பேரூந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னவல

பின்னவல பொலிஸ் பிரிவில் ஹேன்யாய அஸ்எத்தும் பிரதேசத்தில் மலைப்பாங்கான இடத்தில் சென்ற மோட்டார் சைக்கிளில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த 10 வயது சிறுவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளான். விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா

வவுனியா பொலிஸ் பிரிவில் யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று எதிர்திசையில் வந்து கொண்டிருந்த கெப்ரக வாகனத்தில் மோதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார். 35 வயதுடைய வவுனியா - தோணிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் கெப்ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் நீர்கொழும்பிலிருந்து சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று வீதியில் சென்று கொண்டிருந்த பாதசாரியொருவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரதி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 36 வயதுடைய நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த நபராவார். விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லியவெலி

முல்லியவெலி பொலிஸ் பிரிவில் புதுக்குடியிருப்பு - கேப்பாபுலவு வீதியில் சென்று கொண்டிருந்த சிறியரக லொறியொன்று , எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபர் உள்ளிட்ட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் , அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 48 மற்றும் 17 வயதுகளையுடைய முல்லியாவெலி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். விபத்து தொடர்பில் சிறியரக லொறி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here