Wednesday 5 January 2022

முஸ்லிம் பெண்களை அவமதிக்கும் App - மாணவன் கைது..!!!

SHARE



முஸ்லிம் பெண்களை ஏலத்தில் விற்பனை செய்ய உதவுவதாகக் கூறி கைப்பேசி செயலியை உருவாக்கிய விவகாரத்தில் உத்தரகண்டைச் சேர்ந்த பெண்ணையும் பெங்களூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரையும் மும்பை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முஸ்லிம் பெண்களை ஏலத்தில் விற்பனை செய்ய இருப்பதாகக் கூறி ஏராளமான பெண்களின் படத்துடன் புல்லி பாய் என்ற செயலி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பான புகாரின்பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது மும்பை பொலிஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் உத்தரகண்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை மும்பை சைபர் குற்றப் பிரிவு பொலிஸார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்படும் முக்கிய நபர் அவரே என்று பொலிஸார் தெரிவித்தனர். எனினும் அப்பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.

இது தொடர்பாக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் "மும்பை சைபர் குற்றப்பிரிவு பொலிஸார் உத்தரகண்டில் தங்கி அப்பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர். அப்பெண் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதன் பின் மும்பைக்கு கொண்டுவரப்படுவார்´ என்று தெரிவித்தார்.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த விஷால் குமார் (21) என்ற பொறியியல் மாணவரை மும்பை சைபர் பொலிஸார் கைது செய்தனர். அவரும் உத்தரகண்டில் கைதான பெண்ணும் ஒருவரை ஒருவர் அறிந்துள்ளனர் என்றும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

புல்லி பாய் செயலியை உருவாக்கியவர்கள் மீதும் அது குறித்து தகவல் பரவச் செய்த ட்விட்டர் பதிவாளர்கள் மீதும் மும்பை பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புல்லி பாய் செயலியில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களின் படங்கள் அனுமதியின்றி பதிவேற்றப்பட்டு அவர்களை ஏலத்தில் விற்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஓராண்டு காலத்தில் இவ்வாறு நடப்பது இது இரண்டாவது முறையாகும்.

செயலி மூலம் முஸ்லிம் பெண்கள் குறிவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதை உருவாக்கியவர்கள் குறித்த தகவல்களை தில்லி பொலிஸார் நாடியுள்ளனர். அச்செயலி தொடர்பான விவரங்களை வெளியிட்ட ட்விட்டர் கணக்கின் விவரங்களை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்தை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எதிரான இந்தச் செயலை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளனர்.

இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது என்று தில்லி சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை தொடர்பாக வரும் 10 ஆம் திகதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தில்லி காவல் ஆணையர் ராகேஷ் ஆஸ்தானாவுக்கு அந்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது
SHARE