மட்டக்களப்பு வாழைச்சேனை வாகரை பிரதான வீதியிலுள்ள காயங்கேணி பாலத்துக்கு அருகில் முச்சக்கரவண்டி மீது கார் ஒன்று மோதிய விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத கர்ப்பிணி தாய் ஒருவரின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்த சம்பவம் இன்று (17) இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
திருகோணமலை ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய 9 மாத கர்ப்பிணி தாயான சிவானந்தம் சுபாஜினி மற்றும் உறவினர் உட்பட 4 பேர் சம்பவ தினமான கடந்த சனிக்கிழமை பூநகரில் இருந்து பொலனறுவை செவினப்பிட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு முச்சக்கரவண்டியில் பிரயாணித்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் பகல் 2 மணியளவில் காயங்கேணி பாலத்துக்கு அருகில் பிரயாணித்துக் கொண்டிருந்த போது முச்சக்கரவண்டியின் பின்பக்க சில்லு காற்று போனதையடுத்து முச்சக்கரவண்டியை வீதியின் கரைபகுதிக்கு ஓரமாக்கி நிறுத்த முற்பட்ட போது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கர்ப்பிணி தாயார் அவரது உறவினர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து வாழசைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி தாயாரை மேலதிக சிகிச்சைக்காக இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வந்த நிலையில் வயிற்றிலுள்ள சிசு உயிரிழந்துள்ளதாகவும் சத்திர சிகிச்சை மூலம் உயிரிழந்த சிசிவை வெளியில் எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இதேவேளை காரை செலுத்தி சென்ற நபரை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
Tags:
sri lanka news