Sunday 13 February 2022

அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு நாளை முதல் வழங்கப்படும்..!!!

SHARE

நாடுமுழுவதும் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கான உதவித்தொகை நாளை முதல் 28 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்தத் தகவலை பொருளாதார நுண் நிதி, சுயதொழில் மற்றும் வர்த்தக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதன்படி, இதுவரை 3 ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை பெற்ற குடும்பம் ஒன்று, 4 ஆயிரத்து 500 ரூபாயும், 2 ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை பெற்ற குடும்பம் ஒன்று, 3 ஆயிரத்து 200 ரூபாயும் ஆயிரத்து 500 ரூபாய் பெற்ற குடும்பம் ஒன்று ஆயிரத்து 900 ரூபாயும் உதவித்தொகையாகப் பெறவுள்ளன.

அனுராதபுரத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்ததாவது;
சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக கொடுப்பனவை நாடுமுழுவதும் உள்ள 17 லட்சத்து 67 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒட்டுமொத்த வரவு செலவுத் திட்டத்தில் சமுர்த்தி பயனாளிகளின் கொடுப்பனவுக்காக 50 ஆயிரம் மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளோம். இந்த அதிகரிப்பின் மூலம் அரசுக்கு மேலதிகமாக 15 ஆயிரம் மில்லியன் ரூபாயை செலவிட வேண்டியிருக்கும்.

இதன்படி, 2022ஆம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 65 ஆயிரம் மில்லியன் ரூபாயை செலவிட அரசு எதிர்பார்க்கிறது.

இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரம் வலுவடைவதன் மூலம், மக்கள் நாட்டின் பொருளாதாரச் செயற்பாட்டிற்கும் தேசியப் பொருளாதாரத்திற்கும் அதிக பங்களிப்பை வழங்க முடியும் என நம்புகின்றோம்.
கோவிட் 19 தொற்றுநோயின் பேரழிவு விளைவுகள் மற்றும் எதிர்காலத்தில் அவர்களின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்த, அரசினால் முடியும் – என்றார்.

இதேவேளை, சமுர்த்தி உதவியைப் பெறுவதற்கு தகுதியற்ற பலர் இன்னும் சமுர்த்தித் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருவதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
SHARE