இந்தியா - தஞ்சையில் நடந்த தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே களிமேடு என்ற பகுதியில், அப்பர் மடத்திற்கான கோயில் உள்ளது. இங்கு அப்பர் பிறந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்தின் போது சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். மூன்று நாட்கள் இவ்விழா தேரோட்டத்துடன் நடைபெறும். நள்ளிரவு தொடங்கி விடியும் வரை இவ்விழா நடைபெறும்.
அதன்படி 94ஆவது ஆண்டுக்கான திருவிழா நேற்று (ஏப்ரல் 26) காலை தொடங்கி, முக்கிய நிகழ்வான தேரோட்டம் இரவு 10 அளவில் நடைபெற்றது. வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் அப்பர் உற்சவர் எழுந்தருளினார். அலங்கார விளக்குகள் எரிவதற்காகத் தேரின் பின் பகுதியில் பெரிய ஜெனரேட்டரும் இணைக்கப்பட்டிருந்தது.
தேரில் சிறுவர்கள், பெரியவர்கள், பூசாரி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். நள்ளிரவிலும் உற்சாகமாகத் தேரை இழுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொரு வீடாகத் தேரை நிறுத்தி தேங்காய் உடைத்து வழிபட்டனர். தேர் செல்ல செல்ல வழிநெடுகிலும் தண்ணீர் ஊற்றப்பட்டது.
இந்த ஊர்வலம் கிட்டத்தட்ட முடியும் தறுவாய்க்கு வந்தது. கடைசி வீட்டில் தேங்காய் உடைத்து வழிபட்டுவிட்டு திரும்பும் போது மின் விபத்து ஏற்பட்டுள்ளது.
மீண்டும் அப்பர் மடத்துக்குத் திரும்பும் போது தேர், சாலையிலிருந்து பள்ளத்தில் இறங்கியிருக்கிறது. தேர் சாய்ந்த சமயத்தில் அதன் மேல் இருந்த உயர் மின் அழுத்தக் கம்பியில் உரசி தீப்பிடித்து எரியத் தொடங்கியது என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
“கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது. தேரை இழுத்தவர்கள் எல்லாம் சுருண்டு சுருண்டு விழுந்தனர். தேரில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் அருகில் கூட எங்களால் செல்ல முடியவில்லை. காலை கீழே வைக்கும் போது எர்த் அடித்தது. மின்சாரத்தைத் துண்டித்த பிறகு அருகில் சென்று பார்த்தால் எல்லோரும் சுருண்டு விழுந்து கிடந்தனர். ஆர்வமாகத் தேருடன் வந்த சின்ன பசங்கள் எல்லாம் விழுந்து கிடந்தனர். பதற்றத்தில் எங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. இரண்டு நிமிடத்தில் எல்லாம் நடந்துமுடிந்துவிட்டது. கண் முன்னே எல்லாம் துடி துடித்து விழுந்தனர். ஜெனரேட்டர் அருகே அமர்ந்திருந்தவர் தீயில் கருகிவிட்டார்” என்கின்றனர். இந்த விபத்துக்குச் சாலையின் உயரம் தான் காரணம் எனவும் களிமேடு பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த விபத்தில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 10க்கும் மேற்பட்டோருக்குத் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.