மாலை முதல் சீரான மின் விநியோகம்..!!!




முதல்வரின் சீரிய நடவடிக்கையால் நேற்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பெரும்பாலான ஊரகப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. முன்அறிவிப்பு இல்லாமல் ஏற்படும் இந்த மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மின்வெட்டு மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்வெட்டு தொடர்பாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோா் பேரவையில் சிறப்பு கவன தீா்மானம் கொண்டு வந்தனர்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய 796 மின்சாரம் 2 நாள்களுக்கு முன்பாக தடைபட்டது. இருப்பினும், மாநிலத்தின் 41 இடங்களில் மட்டுமே மின் தடை ஏற்பட்டது. நிலக்கரி பற்றாக்குறையைச் சமாளிக்க 4.80 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதற்காக நான்கு நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களிடம் இருந்து நிலக்கரி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிலையில் முதல்வரின் சீரிய நடவடிக்கையால் இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 796 MW மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலினின் சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகளும், மாநில மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டும், இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here