பொலிஸார் முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு..!!!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோர் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் உத்தரவிடுமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் எம்.ஏ.பிரபாகரன் இன்று நிராகரித்தார்.

நூற்றுக்கணக்கானவர்கள் சில நாட்களாக காலி முகத்திடலில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால், பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள 16 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு கொழும்பு – கோட்டை பொலிஸார் மன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிரானவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் ஏதேனும் முறுகல் நிலை ஏற்படும் சாத்தியமுள்ளதாக மன்றில் சுட்டிக்காட்டிய கோட்டை பொலிஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் 16 பேருக்கும் ஏற்ற உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வன்முறையோ, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் சம்பவங்களோ இடம்பெறுவதற்கு முன்னர், உத்தரவு பிறப்பிப்பதற்கான இயலுமை இல்லையென தெரிவித்த மேலதிக நீதவான், சட்டவிரோதமான நடவடிக்கைகள் ஏதேனும் இடம்பெற்றால், பொலிஸ் கட்டளைச் சட்டத்திற்கமைய உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளதென தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் உரிமைக்காக முன்னிலையாவதற்காக அதிகளவான சட்டத்தரணிகள் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்ததாக செய்தியாளர் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here