.jpeg)
வடக்குமாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்துநடாத்திய பண்பாட்டு விழா நேற்றுக் காலை (29.04.2022) யாழ்.பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலரும் கலாசார பேரவைத் தலைவருமான சாம்பசிவம் சுதர்சன் தலைமையில் இடம்பெற்றது.
மயிலாட்டம் கரகாட்டம் கோலாட்டம் நாதஸ்வரம் சகிதம் விழா மண்டபத்திற்கு அதிதிகள் அழைத்து வரப்பட்டனர்.
வணக்கத்திற்குரிய அமரர் மரியசேவியர் அடிகளார் நினைவரங்கில் ஆரம்பமான நிகழ்வுகளின் வரிசையில் வாத்தியஇசை நடனம் மற்றும் பூதத்தம்பி நாட்டுக்கூத்து உட்பட பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு கலைஞர்களுக்கான யாழ் ரத்னா விருதும் இளங்கலைஞர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றன.
வணக்கத்திற்குரிய கலாநிதி மரியோ சேவியர் அடிகளாரை நினைவுறுத்தி திரைநீக்கம் செய்யப்பட்டு மலர் மாலையும் நிறைவுறும் படத்திற்கு சூட்டப்பட்டு மரியோ சேவிய அடிகளாரின் நினைவுப்பேருரையும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்களுடன் .பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனும் , சிறப்பு விருந்தினராக வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், பிரதிப்பணிப்பாளர் இராஜமல்லிகா சிவசுந்த சர்மாவும், கௌரவ விருந்தினராக கலைக்குரிசில் வசந்தி குஞ்சிதபாதமும் யாழ் பிரதேச செயலர் சுதர்சன்,பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,சர்வமத தலைவர்கள்,பாடசாலை அதிபர்கள்,மாணவர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,யாழ் பிரதேச சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கலாசார மலரான யாழ்பாடி மலர் வெளியிடப்பட்டதுடன் தமிழ்ப்பண்பாட்டினடியாக. வாழை இலை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட விழா மண்டபத்தில் வாழை இலையில் மதிய உணவு பரிமாறப்பட்டமையும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
யாழ்.தர்மினி
படங்கள் - ரஜீவன்