பொலிஸ் வீதித்தடையில் கடமையிலிருந்த பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் அதனையடுத்து இடம்பெற்ற சம்பவங்களில் காயமடைந்த 16 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் காவலரண் பகுதியில் வியாழக்கிழமை (5) இரவு 11 .30 மணியளவில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதுடன் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
குறித்த காவலரணில் கடமையிலிருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பொலிஸார் அப்பகுதி வழியாக தலைக்கவசம் (ஹெல்மெட் ) அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் வாய்த்தர்க்கம் மோதலாக உருவாகி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் இதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச்சூடும் அப்பகுதியில் நடத்தியுள்ளனர்.
அத்துடன் சம்பவத்தை அறிந்து அங்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஊடகவியலாளர் உட்பட் 10 க்கும் மேற்பட்ட பொலிஸார் பொதுமக்கள் என 16 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஆராய கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கமல் சில்வா உள்ளிட்ட பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் விசாரணையினை முன்னெடுத்து வருகின்றனர்.
Tags:
sri lanka news