Sunday 15 May 2022

டெல்லி வணிக வளாக தீ விபத்தில் 27 பேர் பலி: இருவர் கைது..!!!

SHARE

இந்தியாவின் புது டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.

பல வணிக நிறுவனங்கள் இயங்கி வந்த நான்கு மாடி கட்டட வளாகத்தில் நேற்று மாலை பற்றிய தீ அனைத்து தளங்களுக்கும் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக 24 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்த விபத்தில் உயிரிழந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக டெல்லி தீயணைப்புத்துறை துணை தலைமை அதிகாரி சுனில் சவுத்ரி தெரிவித்தார். இன்று சனிக்கிழமை காலையும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தன

40க்கும் மேற்பட்டோர் தீக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 70 பேர் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

வணிக வளாகத்தில் தீ பிடித்த நிலையில் தப்பிக்க நினைத்து பலர் மாடியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. நீண்ட போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

தீ பரவிய வேளையில், கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்ததாகவும் அத்தளத்திலேயே அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 2 இலட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாவும் வழங்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இக்கட்டடத்தில் இயங்கிய நிறுவனமொன்றின் உரிமையாளர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, மேற்படி கட்டடம் பாதுகாப்பு அனுமதியை பெற்றிருக்கவில்லை எனக் கூறும் பொலிஸார், கட்டடத்தின் உரிமையாளரை பொலிஸார் தேடி வருகின்றனர். இக்கட்டடத்தில் ஒரேயொரு படிகட்டு மாத்திரமே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.




SHARE