Sunday 22 May 2022

ஆஸ்திரேலிய தேர்தல்! ஆச்சரிய முடிவுகளில் சில அபூர்வ தகவல்கள்..!!!

SHARE

ஆஸ்திரேலியாவின் 47 ஆவது நாடாளுமன்றத்திற்காக நடைபெற்ற தேர்தலில், லேபர் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் எல்லா தேர்தல்களும் போல் அல்லாமல், சில அபூர்வமான நிகழ்வுகள் இம்முறை நடந்தேறியிருக்கின்றன. தொகுதி வாரியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் உறுப்பினர்களின் வழியாக இந்த தகவல்களின் பின்னணி –ஆஸ்திரேலிய தேர்தல் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றிருக்கிறார் தமிழர் ஒருவர். அவர் பெயர் திருமதி மிஷேல் ஆனந்தராஜா. மெல்பேர்னின் தொகுதியில் போட்டியிட்டவர். தொழில் ரீதியான மருத்துவரான இவர், கோவிட் தடுப்பூசிகளில் ஒன்றான அஸ்ரா-செனிக்காவுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டதால், கடுமையான எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுத்தவர். 1972 ஆம் ஆண்டு முதல், உடைக்கமுடியாத லிபரல்களின் கோட்டை எனப்பட்ட ஹிக்கின்ஸ் தொகுதியை, லேபர்களுக்காக வென்று கொடுத்ததன் மூலம், வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார் மிஷேல் ஆனந்தராஜா. மெல்பேர்னில் மிக முக்கிய தொகுதிகளில் – இம்முறை தேர்தலில் – லிபரல்களை அடித்துக் கலைத்த பெண் வேட்பாளர்களில் மிக முக்கியமான வெற்றியைப் பெற்றவர் மிஷல் ஆனந்தராஜா என்பது குறிப்பிடத்தகது.

மெல்பேர்னின் “அஸ்ரன்” தொகுதியில் போட்டியிட்ட லிபரல்களின் நம்பிக்கை நட்சத்திரம் அலன் டட்ஜ், ஆச்சரியமாக மீண்டும் வென்றிருக்கிறார். லிபரல் கூட்டணி அரசில் பல்-கலாச்சார அமைச்சராகப் பதவி வகித்த இவர், தன்னோடு பணிபுரிந்த பெண் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கடந்த டிசெம்பர் மாதம், அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார். விசாரணைகள் முடியும்வரைக்கும் தான் பின்வரிசை உறுப்பினராகவே இருப்பதாகச் சொன்னார். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற பெண், தொலைக்காட்சியில் பேட்டிகொடுத்து, அழுது புலம்பினார். கடைசியில் அவருக்கு ஐந்து லட்சம் டொலர்கள் பணம் கொடுத்து, சமரசம் செய்துவிட்டதாக வந்த செய்தியுடன், அந்தப் பெண்ணின் சத்தத்தையும் ஊடகங்களில் காணவில்லை. இவ்வளவு, சிக்கல்களின் பின்னணியில் இம்முறையில், அலனுக்கு ஆப்பு நிச்சயம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மெல்பேர்ன் எங்கும் ஏனைய லிபரல்களுக்கு மக்கள் கலைத்துக் கலைத்து அடிகொடுத்தபோதும், அஸ்ரன் தொகுதியில் அலனை, தொகுதி மக்கள் வாரி அணைத்திருக்கிறார்கள்.

மெல்பேர்னில் “ஸ்கலின்” தொகுதியில் லேபர் கட்சியில் போட்டியிட்ட சிறிலங்காவைச் சேர்ந்த விரோஷ் பெரேரா படுதோல்வியடைந்தாலும் தொகுதியில் கிட்டத்தட்ட – 32 வீதமான – 15 ஆயிரம் வாக்குகளைப் பெற்றியிருக்கிறார். இவர் கட்டட விற்பனைத்துறையில் பெரும் தொழிலதிபர் என்று பீலா விட்டுக்கொண்டு திரிகிறார் என்று அண்மையில், ஆஸ்திரேலிய ஊடகமொன்று ஆதாரங்களுடன் தாறுமாறாகக் கிழித்தது. இருந்தாலும், தான் நிச்சயம் வெல்லுவேன் என்று சூளுரைத்திருந்தார். மெல்பேர்னின் வடக்கு பகுதியான ஸ்கலின் தொகுதி, ஏகப்பட்ட தமிழர்கள் செறிவாக வாழும் பிரதேசம். இறுதியில், இவருக்கான தோல்வி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இம்முறை தேர்தலில் – மெல்பேர்னின் தமிழர்களின் தலைநகர் என்று அழைக்கப்படும் டன்டிநொங் பிரதேசத்தை உள்ளடக்கிய “ஹோல்ட்” தேர்தல் தொகுதியில் சுவாரஸ்யமாக போட்டியொன்று இடம்பெற்றது. அதாவது, முன்னணி வேட்பாளர்கள் இருவருமே சிறிலங்கர்கள். ஒருவர் லேபர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கஸன்ட்ரா பெர்னாண்டோ. சிறிலங்காவிலிருந்து 11 வயதில் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தவர். இவரை எதிர்த்து லிபரலில் இன்னொரு சிறிலங்கரான ரஞ்ச் பெரேரா நிறுத்தப்பட்டார். இருவருக்குமான இறுக்கமான போட்டியில் கஸண்ட்ரா 8614 வாக்குகளால் ரஞ்ச் பெரேராவைத் தோற்கடித்து வெற்றிபெற்றார். இந்தத் தொகுதியில் சுயேட்சையாகக் களமிறங்கிய இந்தியத் தமிழர் ரவி ரகுபதி வெறும் 1972 வாக்குகளைப் பெற்று அடிவாங்கிக்கொண்டார்.

மெல்பேர்னிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இந்தியர்களின் குடிவரவு அதிகமானதையடுத்து, இம்முறை இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வேட்பாளர்களை இரண்டு பிரதான கட்சிகளும் முன் நிறுத்தின. ஆனால், அநேக இடங்களில் அவர்கள் அடி வாங்கியிருக்கிறார்கள். ஆனால், இம்முறை தேர்தலில் அவர்களுக்குக் கிடைத்துள்ள பாடம் அடுத்தடுத்த தேர்தல்களின் சரியாக அரசியல் அனுபவங்களைப் பெற்றுக்கொடுக்கக்கூடும். விக்டோரியாவின் “கொரியோ” தொகுதியில் லிபரல் ஆசனத்துக்கு இறக்கப்பட்ட மனீஷ் பட்டேல், “ல ட்ரோப்” தொகுதியில் லேபர் ஆசனத்துக்கு இறக்கப்பட்ட அபிமன்யூ குமார், “மரிபனொங்” தொகுதியில் லிபரல்களின் சார்பில் இறக்கப்பட்ட மிரா டி சில்வா, “லேலூர்” தொகுதியில் லிபரல் சார்பில் களமிறக்கப்பட்ட ரவி கதிபதி, “ஹோதம்” தொகுதியில் லிபரல்களின் சார்பில் இறங்கிய சாவித்ரி பெவினகொப்பா, நியூ சவுத் வேல்ஸ் “சிவ்லி” தொகுதியில் லிபரல்களின் சார்பில் களமிறக்கப்பட்ட ஜூகந்தீப் சிங், “கிறீன் வே” தொகுதியில் லிபரல்களின் சார்பில் இறகப்பட்ட பிரதீப் பதி, “மக்மோஹன்” தொகுதியில் லிபரல்களால் இறக்கப்பட்ட விவேக் சிங்ஹா, “மிச்சல்” தொகுதியில் லேபர்களின் சார்பில் இறக்கப்பட்ட இம்மானுவேல் செல்வராஜ், “சிட்னி” தொகுதியில் கிறீன் கட்சியில் இறக்கப்பட்ட சேட்டன் சஹாய் ஆகியோர் போட்டியிட்டு தோல்வியடைந்திருக்கிறார்கள். பார்க்கப்போனால், சிட்னி – மெல்பேர்ன் பகுதிகளின் குறிப்பிட்ட இடங்களில் – ஆச்சரியத்தக்க வகையில் – லிபரல்கள் இந்தியர்களை நம்பித்தான் இம்முறை களமிறங்கியிருக்கிறார்கள். அவ்வளவுதூரம் அந்தந்த பகுதிகளில் இந்திய வாக்காளர்கள் செறிவடைந்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய செனெட் தேர்தலில் விக்டோரியாவில் போட்டியிட்ட அரன் மயில்வாகனத்தின் விக்டோரிய சோஷலிசக் கட்சி 9276 வாக்குகளை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது. குவீன்ஸ்லாந்தில் போட்டியிட்ட One Nation என்ற நிறவாதக் கட்சி 84 644 வாக்குகளைப் பெற்றுக்கொண்டபோதும் எந்த ஆசனத்தையும் வெற்றி பெறவில்லை. இந்தக் கட்சியில் இந்தியத் தமிழரான முத்துராஜ் குருசாமி போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலின் இன்னொரு விநோதமாக, லேபர் கட்சி எதிர்க்கட்சியாக பதவி வகித்த காலத்தில் நிழல் குடிவரவு அமைச்சராக – லேபர் கட்சி சார்பில் குடிவரவு விவகாரங்களில் லிபரல் அரசின் கொள்கைகளை விமர்சித்துவந்த – அகதிகள் விவகாரத்தில் லிபரல்களை தோலுரித்த – கிறிஸ்டீனா கெனெலி நியூ சவுத் வேல்ஸ் “ப்ளவொர்” தொகுதியில் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார். இந்த தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட – வியட்நாமிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதியாகத் தஞ்சமடைந்த – டெய் லீ என்ற பெண்ணிடம் படுதோல்வியடைந்தார். அமெரிக்காவில் பிறந்து ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த கிறிஸ்டினா கெனலி, லேபர் கட்சியில் பிரதித் தலைவராகப் பதவி வதித்தவர் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

லிபரல்களுக்கு அநேக இடங்களில் அடி விழுந்திருந்தாலும் முக்கிய புள்ளிகள் தங்களது ஆசனத்தை இழக்கவில்லை. ஸ்கொட் மொறிஸன், தேசியக் கட்சியின் பானபி ஜொய்ஸ் போன்றவர்கள் தங்களது தொகுதியில் பெருவாரியான விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்கள். பீற்றர் டட்டன், லிபரல் கட்சிக்கே ஆப்படித்து, முன்னாள் பிரதமர் மல்கம் ரேன்புல் அவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர். குடிவரவு அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், ஆஸ்திரேலியாவின் மிகவும் வெறுக்கப்படும் அரசியல்வாதி என்று பகிரங்கமாகவே அறிவிக்கப்பட்டவர். ஆச்சரியமளிக்கும் வகையில், குவீன்ஸ்லாந்தில் அவர், தனது தொகுதியில் பெருமளவான வாக்குகளுடன் வென்றிருக்கிறார். ஆனால், லிபரல் கூட்டணி அரசின் கருவூலக் காப்பாளராக – தினமும் அரச முகமாக மக்கள் முன் தோன்றிக்கொண்டிருந்த – ஜொஷ் பைடின்பேர்க், மெல்பேர்னில் அவரது “கூயொங்” தொகுதியில் தரும அடி வாங்கி, ஆசனத்தையே இழந்திருக்கிறார். 12 வருடங்களுக்குப் பிறகு, அரசியலில் இருந்து கலைக்கப்பட்டிருக்கிறார்.

SHARE