Sunday 1 May 2022

உக்ரைனின் முற்றுகை நகரில் இருந்து மக்கள் வெளியேற்றம்..!!!

SHARE

உக்ரைனின் தெற்கு நகரான மரியுபோலில் உக்ரைனிய துருப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பகுதியான அசொவ்ஸ்டால் உருக்கு ஆலையில் இருந்து சுமார் 20 பொதுமக்கள் வெளியேறியுள்ளனர்.

இந்த பாரிய கைத்தொழில் வலயத்தை முடக்குவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் பட்டின் கடந்த வாரம் உத்தரவிட்ட நிலையில் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறும் முதல் குழு இதுவாகும்.

அங்கு தொடர்ந்து சிக்கி இருப்பதாக கூறப்படும் சுமார் 1,000 பொதுமக்களை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இதேநேரம் கிழக்கு உக்ரைனில் தமது தாக்குதல்களை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

மரியுபோல் நகரை கைப்பற்றியதாக ஒரு வாரத்திற்கு முன் ரஷ்யா அறிவித்த நிலையில் “விமானங்கள் பறக்க முடியாத வகையில் இந்த கைத்தொழில் வலயத்தை முடக்கும்படி”, புட்டின் தனது துருப்புகளுக்கு உத்தரவிட்டார்.

எனினும் இந்த உருக்கு ஆலையில் இருந்து ஆறு சிறுவர்கள் உட்பட 25 பொதுமக்கள் வெளியேறியதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பது பற்றி கூறப்படவில்லை.

எனினும் 20 பெண்கள் மற்றும் சிறுவர்களே வெளியேறியதாக அந்த உருக்காலைக்குள் இருக்கும் உக்ரைன் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மரியுபோல் நகரை கைப்பற்றுவது உக்ரைனின் ஒட்டுமொத்த தெற்குக் கடற்கரையையும் கைப்பற்றும் ரஷ்யாவின் திட்டத்திற்கு உதவியாக உள்ளது. இது 2014 ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றிய கிரிமியாவுடன் கிழக்கு உக்ரைனில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹன்ஸ் போன்ற ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளை ஒன்றிணைப்பதாக அமையும். அதேபோன்று மொடோவாவில் உக்ரைனிய மேற்கு எல்லை பகுதியில் இருக்கும் ரஷ்ய ஆதரவு பகுதியை அணுக முடியுமானதாக இது அமையும்.
SHARE