மாணவியை பரீட்சை எழுதாமல் தடுத்த அதிபர் - மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

 


மாணவி ஒருவருக்கு பரீட்சை எழுதவிடாது பரீட்சை அனுமதி அட்டையை வழங்காமல் அச்சுறுத்திய அதிபருக்கு எதிராக கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


நாடு பூராகவும் கல்வி பொது சாதாரண பரீட்சை நேற்று (23) ஆரம்பித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய மாணவியின் தந்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய மாணவிக்கு பரீட்சை எழுதுவதற்கான பரீட்சை அனுமதி அட்டை பெற்றோர் மற்றும் பிராந்திய இணைப்பாளர் ஆகியோரின் முன்னிலையில் அதிபர் வழங்கியதோடு மன்னிப்பு கோரிக்கையும் விடுத்துள்ளார்.

இருந்த போதிலும் பரீட்சை அனுமதி அட்டை உரிய நேரத்திற்கு அதிபரினால் வழங்கப்படாமையினால் இன்று இடம்பெற்ற பரீட்சைக்கு மாணவி தோற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் இன்று (24) இடம்பெறவுள்ள பரீட்சைக்கு எனது மகள் தோற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் உரிய அதிபருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி செலுத்துவதாகவும் எனது பிள்ளைக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்படாதது போன்று மேலும் ஐந்து மாணவர்களுக்கும் வரவு விடயத்தை காட்டி குறித்த அதிபர் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கவில்லை என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை குறிப்பிட்டார்.

இதே வேளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட உரிய தரப்பினரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் மேற்படி விடயம் தொடர்பில் அதிபருக்கெதிராக உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. .
Previous Post Next Post


Put your ad code here