Sunday 15 May 2022

மக்களுக்கு துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும்..!!!

SHARE


உருவாகியிருக்கின்ற அரசியல் சூழலைப் பயன்படுத்தி பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மக்களை மீட்பது மாத்திரமன்றி, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை வென்றெடுப்பதற்கான சந்தர்ப்பமாகவும் தமிழ் தரப்புக்கள் இச்சூழலைப் பயன்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வினைக் காணும் நோக்குடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார்.

இந்த அரசியல் சூழலைப் பயன்படுத்தி, தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்கான ஆரம்பமாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று, அரசியல் கைதிகள் விடுதலை - காணாமல் போனோர் விவகாரத்திற்கான தீர்வு - பல்வேறு காரணங்களினால் பயன்படுத்தப்பட முடியாமல் இருக்கும் எமது மக்களின் காணிகளை விடுவித்தல் - இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல் போன்ற மக்களின் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பமாக இந்தச் சூழலைப் பயன்படுத்த தமிழ் தலைமைகள் முன்வரவேண்டும்.

மாறாக, சுயலாப அரசியல் நலன்களை மனதில் கொண்டு, வழமை போன்று தமிழ் தலைமைகள் எதிர்ப்பு அரசியலை மேற்கொள்ளுமாயின், அது எமது மக்களுக்கு இழைக்கின்ற இன்னுமொரு வரலாற்று துரோகமாகவும் தவறவிடப்பட்ட இன்னுமொரு சந்தர்ப்பமாகவும் அமையும்" என்று தெரிவித்துள்ளார்.
SHARE