Wednesday 25 May 2022

விரைவில் மண்ணெண்ணெய் விலையிலும் திருத்தம் ; காஞ்சன விஜேசேகர..!!!

SHARE

பெற்றோலிய கூட்டுத்தாபனம் அதிக நஷ்டத்தை எதிர்கொள்வது மண்ணெண்ணெய்யை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்வதனாலேயே ஆகும்.

எனவே மண்ணெண்ணெய் விலையிலும் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (24) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில் ,

மண்ணெண்ணெய் லீற்றரொன்று 87 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுகிறது. எனினும் இதற்கான செலவு 362.26 ரூபாவாகும். அதற்கமைய 275.26 ரூபா நஷ்டத்துடனேயே மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது.

மண்ணெண்ணெய் விலையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மீன்பிடித்துறையினரும் , பெருந்தோட்டத் தொழிலாளர்களும் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினரே மண்ணெண்ணெய்யை அதிகளவில் உபயோகிக்கின்றனர். அண்மைக்காலமாக எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அதிகளவானோரால் மண்ணெண்ணெய் உபயோகிக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் மீனவர்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மண்ணெண்ணெய்யை அதிகளவில் உபயோகிப்போருக்கு நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும்.

எவ்வாறிருப்பினும் குறைந்த விலையில் வழங்கப்படுவதால் அதனை முறைகேடாக பயன்படுத்தும் அளவு அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் ஈடுபட்டுள்ள பலர் டீசல் விலை அதிகரிக்கும் போது மண்ணெண்ணையை உபயோகிக்கின்றமை தெரியவந்துள்ளது.

எனவே பேரூந்துகளின் புகை பரிசோதனை தொடர்பில் விசேட கண்காணிப்பினை முன்னெடுக்குமாறு போக்குவரத்து அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

SHARE