பிரதமர் அதிரடி நடவடிக்கை ! அத்தியாவசிய தேவை தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய விசேட குழு..!!!


அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளில் நிலவும் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைகளை பெற்றுக்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட குழு ஒன்றை நியமித்துள்ளார்.

அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் திரவங்கள் தடையின்றி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு யோசனைகளை பெற்றுக்கொள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருந்து பொருட்கள் விநியோகத்தில் நிலவும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்துக்கொள்வதற்கு தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் பொறுப்பு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தனவிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன்,உரம் தட்டுப்பாடு மற்றும் அதற்கான தீர்வு தொடர்பில் ஆராய்ந்து யோசனைகளை முன்வைக்கும் பொறுப்பு ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் அகில விராஜ் காரியவசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் தட்டுப்பாடு மற்றும் அதற்கான தீர்வு தொடர்பில் ஆராயும் பொறுப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் உரிய துறைசார் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய தீர்வு தொடர்பிலான அறிக்கையை பிரதமரிடம் நேரடியான கையளிக்கவுள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here