Wednesday 25 May 2022

மிக மோசமான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் : எச்சரிக்கிறார் விவசாயத்துறை அமைச்சர்..!!!

SHARE

நாட்டின் விவசாயத்துறை பாரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ளது.பெரும்போக விவசாய செய்கை வீழ்ச்சியடைந்துள்ள பின்னணியில் சிறுபோக விவசாய செய்கையும் வீழ்ச்சியடைந்தால் மிக மோசமான உணவு பற்றாக்குறையை முழு நாடும் எதிர்க்கொள்ள நேரிடும்.

வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை குறித்து முழு நாட்டு மக்களுக்கும் அவதானம் செலுத்த வேண்டும் என விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டில் அரிசி தட்டுப்பாடு அல்லது உணவு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க போவதில்லை என முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் மனம் போன போக்கில் குறிப்பிட்டார்.

இவ்வருடம் பாரிய உணவு பற்றாக்குறையை எதிர்க்கொள்ள நேரிடும் என்பதை சுற்றாடற்துறை அமைச்சராக பதவி வகிக்கையில் குறிப்பிட்டேன்.

உர பிரச்சினையினால் விவசாயிகள் எதிர்க்கொண்டுள்ள பாரதூரமான பிரச்சினைகளை விளங்கியும்,விவசாயத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அவதானம் செலுத்தியும் உணவு தட்டுப்பாடு தொடர்பில் விடயங்களை வெளிப்படுத்தினேன்.

உணவு தட்டுப்பாடு சவாலை எதிர்க்கொள்ளும் நோக்கில் கடந்த அரசாங்கத்தில் சுற்றாடற்துறை அமைச்சராக பதவி வகித்துக் கொண்ட நிலையில் நாட்டில் விவசாயத்துறை பயிர்செய்கையை ஊக்குவிக்கும் திட்டங்களை செயற்படுத்தும் யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்தேன்.

சேதன பசளை திட்டம் சிறந்ததாயினும் தற்போது அத்திட்டத்தை விவசாயிகள் வெறுக்கும் நிலைமை தோற்றம் பெற்றுள்ளது. இரசாயன உரம், கிருமிநாசினிகள் இல்லாமல் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என நான் குறிப்பிட்ட போது ஒருசிலர் அதற்கு எதிரான கருத்துக்களை குறிப்பிட்டார்கள்.

சேதன பசளை திட்டத்தை செயற்படுத்த ஜனாதிபதி 17 அமைச்சுக்களை உள்ளடக்கிய விசேட குழுவை நியமித்தார். எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை அடைய ஒருசில தரப்பினர் ஒத்துழைப்பு வழங்காத காரணத்தினால் நாட்டின் விவசாயத்துறை பாரிய சவாலை எதிர்க்கொண்டுள்ளது.

எதிர்வரும் மாதங்களுக்கு தேவையான அரிசி உட்பட அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை காணப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு முதன் முறையாக விவசாயத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டேன். 4 வருட காலத்திற்கு பின்னர் மீண்டும் விவசாயத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளேன்.

2018ஆம் ஆண்டு பெரும்போக விவசாயத்துறை சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு காரணிகளினால் பெரும்போக விவசாயம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சிறுபோக பயிர்ச்செய்கையில் ஈடுப்படாமல் விவசாயிகள் எரிபொருள் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

சிறுபோக விவசாயமும் பாதிக்கப்பட்டால் நாடு மிக மோசமான உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள நேரிடும்.விவசாயிகள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார்.


SHARE