வவுனியா,கணேசபுரத்தில் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்ற சிறுமி ஒருவர் வீடு திரும்பாத நிலையில், அந்தப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . இராசேந்திரன் யதுர்சி (வயது -16) என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தந்தையை இழந்த இந்தச் சிறுமி தனது மாமாவுடன் வசித்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் மதியம் தனியார் வகுப்புக்குச் சென்றுவருவதாகக் கூறிச் சென்ற சிறுமி மாலை வரை வீடு திரும்பவில்லை. சிறுமியைத் தேடிய உறவினர்கள். சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இது தொடர்பில் நெளுக்கு ளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் .
அதன்பின்னர் நெளுக்குளம் பொலிஸாரும் , ஊரவர்களும் இணைந்து தேடுதல் நடத்திய நிலையில் இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் அந்தப் பகுதியில் ஆள்கள் நடமாட்டம் அற்ற இடத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது. அந்தப் பகுதிக்கு தடயவியல் பொலிஸார் அழைக்கப்பட்டு, மோப்பநாய் உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்டது.
கிணற்றில் இருந்து 50 மீற்றர் தூரத்திலுள்ள மரம் ஒன்றின் கீழ் சிறுமியின் காலணி மற்றும் புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டன. மோப்பநாய் கிணற்றில் இருந்து 100 மீற்றர் தூரத்திலுள்ள காணியில் அமைந்துள்ள பாவனையற்ற வர்த்தக நிலையம் ஒன்றையும் அடையாளம் காட்டியது. அந்த வர்த்தக நிலையத்திற்குள் கயிறு ஒன்றும் வெற்று மதுபானப் போத்தல்களும் காணப்பட்டுள்ளன. இரவு 11.45 மணியளவில் சிறுமியின் உடல் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது .
அந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையான மக்கள் குவிந்ததால் பதற்றமான நிலைமை ஏற்பட்டது. பொலிஸாரும், இராணுவத்தினரும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
சிறுமியின் மரணத்தில் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர் . சிறுமியின் உடல் மீட்கப்பட்டு வவுனியா பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது . இன்னமும் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்றும் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மேலதிக தகவல்கள் தெரியவரும் என்றும் நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
Tags:
sri lanka news