யாழ். பல்கலைகழக 2ம் வருட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை..!!!



யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கையில் பிரகாரம் 2 வருட காலத்திற்கு குறையாத வகுப்புத்தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.பல்கலைக்கழத்தின் புதுமுக மாணவர்களை ஒன்று கூடல் எனும் பெயரில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதிக்கு அழைத்து பகிடி வதைக்கு உட்படுத்தப்படுவதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ்க்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் அது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளரால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து சட்ட நிறைவேற்று அதிகாரி, மாணவர் ஆலோசகர் மற்றும் மாணவர் ஒழுக்காற்று அதிகாரி உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று புதுமுக மாணவர்களை சிரேஷ்ட மாணவர்களிடம் இருந்து மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் சிரேஷ்ட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்பத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் தனது பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புதுமுக மாணவர்களின் வாக்கு மூலங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

பூர்வாங்க விசாரணைகளின் அடிப்படையில், குற்றவாளிகளாக காணப்படும் மாணவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதன் அடிப்படையில் குற்றவாளிகளாக காணப்படும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின் பிரகாரம் 2 வருட காலத்திற்கு குறையாத வகுப்பத்தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post


Put your ad code here