Tuesday 5 July 2022

பதவி விலகத் தயார் ரணில் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்..!!!

SHARE

ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்கவின் ஆறு மாத காலத்தில் நாட்டை மீட்டெடுக்கும் திட்டம் சிறப்பானது என்றால் தான் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் நடந்த பேச்சுவார்த்தை மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது குறித்த திட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

நாட்டை இந்த நெருக்கடியான நிலையில் இருந்து முன்னெடுப்பதற்கு குறைந்தது 4 முதல் 5 வருடங்கள் தேவை என்று சுட்டிக்காட்டினார். இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் நாடாளுமன்றம் வந்திருந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அருகில் அமர்ந்து பிரதமரின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி – 6 வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை, தங்களுக்குத் தந்தால் ஆறு மாத காலத்தில் மீட்டெடுக்கத் தயார் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளர். திறனான, துரிதமான திட்டம் இருக்குமாயின், அதனை வரவேற்கிறோம். ஆனால் இவ்வாறு உலகில் எங்கும் நடக்கவில்லை. அதற்காக அநுரகுமார திசாநாயக்கவின் திட்டத்தை, யோசனையை புறக்கணிக்க முடியாது. அப்படி நடந்தால் உலகத்திற்கு இலங்கை முன்னுதாரணமாக அமையும். இது நோபல் பரிசு பெரும் திட்டமாக இருக்கும் அப்படி ஒரு திட்டம் இருக்குமாயின், எனது பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார். அதனை ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். திறனான, துரிதமான திட்டம் இருக்குமாயின் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம்.அவ்வாறு இல்லாமல் மக்களைத் திரட்டிக்கொண்டு வீதியில் நடைபயணம் செய்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை.” என்று பிரதமர் தெரிவித்தார்.

ஜே.வி.பி.யினர் ஆறு மாத காலத்தில் நாட்டை முன்னெடுக்கும் திட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்று கூறியபோது, எதிர்க்கட்சியினர் கூச்சலிட ஆரம்பித்தனர்.

கூச்சலுக்கு மத்தியில் பிரதமர் உரையாற்றினார். பிரதமரின் உரையை ஜனாதிபதி தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருந்தார். உரை முடிந்தும் கூச்சல் நீடிக்க சபாநாயகர் சபையை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.
SHARE