யாழ்.ஆரோக்கிய நகரத்திட்டத்தின் கீழ் 3 பாடசாலை வளாக வீதிகள் தெரிவுசெய்யப்பட்டு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு வழிப்பாதை வீதிகளாக நடைமுறைப்படுத்தி துவிச்சக்கரவண்டிப் பாவனைக்கென மாத்திரம் விடப்படவுள்ளது என யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது:
யாழ்.ஆரோக்கிய நகரத்திட்டத்தின் கீழ் சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கவும் வீதி விபத்துக்களைக் குறைக்கும் நோக்குடனும் பல்வேறு அரச மற்றும அரச சார்பற்ற பங்குதாரர்களின் ஆதரவுடன் இந்தச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அதன்படி யாழ்.இந்துக்கல்லூரி மற்றும் யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைகளை அண்மித்த பகுதிகள் ஒரு வழிப்பாதையாக குறிப்பிட்ட நேரத்துக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதாவது பாடசாலை வேளைகளான காலை 6.45 மணிமுதல் 8 மணிவரையும் பின் பிற்பகல் ஒரு மணிமுதல் 2 மணிவரையும் இவ்வாறு துவிச்சக்கரவண்டி பாவனைக்கென ஒருவழிப்பாதையாக நடைமுறைப்படுகின்றது.
இதன்போது பின்வரும் 3 வழிமுறைகளை மக்கள் கடைப்பிடித்தல் வேண்டும்.
முதலாவது வழிமுறையாக கஸ்தூரியார் வீதி ஒரு வழிப்பாதையாகக் கொண்டுவரப்படுகின்றது. அரசடி வீதியிலிருந்து கஸ்தூரியார் வீதிக்குள் உள்நுழையும் வாகனங்கள் சுற்றுச்சந்தியை (roundabout) அடைந்து வலது பக்கமாக கல்லூரி வீதிக்குள் திரும்புவது தடைசெய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது கே.கே.எஸ். வீதியிலிருந்து சுற்றுச்சந்தி வரையான கல்லூரி வீதி ஒரு வழிப்பாதையாக கொண்டுவரப்படுகின்றது. இங்கு கே.கே.எஸ் வீதியிலிருந்து யாழ். இந்துக்கல்லூரி நுழைவாயிலை அடையும் வாகனங்கள் சுற்றுச்சந்தியை அடைந்து வலது மற்றும் நேரான வீதிகளினூடாக வெளிச் செல்ல முடியும்.
மூன்றாவதாக கல்லூரி ஒழுங்கை துவிச்சக்கரவண்டிப்பாவனைக்கு மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது என்பனவாகும்.
இந்தத் திட்டமானது பாதுக்காப்புமிக்க வீதிகளை பாடசாலைச் சமூகத்துக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படுத்திக்கொடுப்பதனை நோக்கமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதி வழிமுறைகள் உள்ளடங்கிய பதாதைகள் குறிப்பிட்ட வீதிகளில் இன்றுமுதல் வைக்கப்படும்– என்றுள்ளது.