Tuesday 13 September 2022

சட்டபூர்வ அனுமதியூடாக மாத்திரம் யாழ்ப்பாணத்தில் 8 ஆண்டுகளில் ஒரு லட்சம் பனைகள் சாய்ப்பு..!!!

SHARE

யாழ். மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் அனுமதி பெற்று மாத்திரம் ஒரு லட்சத்து 572 பனை மரங்கள் தறிக்கப்பட்டுள்ளன என்று பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட தகவலிலேயே பனை அபிவிருத்திச் சபை இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 2016ஆம் ஆண்டிலேயே அதிகளவான பனை மரங்கள் 16 ஆயிரத்து 285 தறிக்கப்பட்டுள்ளன. பின்னர் படிப்படியாக இந்த எண்ணிக்கை குறைந்து வந்தாலும் 2019ஆம் ஆண்டில் மீண்டும் இது அதிகரித்து 15 ஆயிரத்து 99 பனை மரங்கள் தறிக்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் சங்கானை, காரைநகர், கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளிலேயே அதிகளவான பனை மரங்கள் அனுமதியுடன் தறிக்கப்பட்டுள்ளன.

‘சட்டபூர்வமான எண்ணிக்கை ஒரு லட்சம் எனில் அதற்கு மேலதிகமாக 50 ஆயிரம் பனை மரங்கள் சட்டபூர்வமற்ற முறையில் தறிக்கப்பட்டிருக்கலாம். பனை மரம் சட்டபூர்வமற்ற முறையில் தறிக்கப்படுவது குறைவு. அதன் மீதான கண்காணிப்பு அதிகம் என்பதால் இந்த நிலைமை. மேலும், கடந்த 8 காலப் பகுதியில் தறிக்கப்பட்ட இந்த எண்ணிக்கையை விட பல மடங்கு எண்ணிக்கையில் பனம் விதைகள் நடப்பட்டுள்ளன. அதற்காக தறிக்கப்பட்டதையும், நடுகை செய்யப்பட்டதையும் நாம் ஒருபோதும் சமப்படுத்த முடியாது.

ஏனெனில், பனையின் முளைதிறன் குறைவு என்பதுடன், அது பயன்தருவதற்கு மிக நீண்ட காலம் எடுக்கும். தென்னைப் பயிர்ச்செய்கையை பெரிய அளவில் மேற்கொள்வதற்காக, பனை மரங்கள் உள்ள காணிகளை தீயிட்டு அழிக்கின்றனர். இவ்வாறும் எமது பனை வளம் அழிக்கப்படுகின்றது’ என்று வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டினார்.
SHARE