காதல் விவகாரம் குறித்து மாணவர்கள்மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் 20 வயதான மகன் உள்ளிட்ட 5 பேர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகனின், நண்பனின் காதலி என கூறப்படும் யுவதி ஒருவருக்கு வாழ்த்து அட்டை பெற்றுக் கொடுத்தமையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், காதல் விவகாரத்தை மையப்படுத்திய தாக்குதலே அது என விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கிரிபத்கொட – மாகொல வீதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு அருகில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் தாக்குதலை முன்னெடுப்பதற்காக சந்தேக நபர்கள், தொழில் மற்றும் வாணிப அமைச்சின் செயலரின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள டொயாடோ ரக வாகனத்திலேயே வருகை தந்துள்ளதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.இந்த தாக்குதலில் காயமடைந்த இரு மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.