யாழில் போதைப்பொருள் பாவனையால் சீரழியும் இளம் சமூகம்..!!!


போரினால் சிதைவடைந்த வட இலங்கையின் மீள் உருவாக்கத்தின் ஆணிவேராக இருக்க வேண்டிய இளம் சந்ததியினரும் பாடசாலை மாணவர்களும் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையில் சிக்கி வருகின்றமை தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்பாடு தற்போது பாரிய சமூகப் பிரச்சினையாக உருவாகி வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக யாழ். குடாநாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் த. சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.

போதைப்பொருள் பாவனை காரணமாக எதிர்ப்பு சக்தி குறைவடைந்து ஈரல், இதயம் போன்றவற்றில் ஏற்படும் அழற்சியால் அண்மைக்காலமாக பல உயிரிழப்புகளும் சம்பவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, போதைப்பொருள் பாவனையால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், யாழ். போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று கவனயீர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்தது.

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக ஆரம்பமான இந்த பேரணி மணிக்கூட்டு வீதியூடாக யாழ்.பொலிஸ் நிலையத்தை அடைந்து, அங்கிருந்து பிரதான வீதியூடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.

இதன்போது, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் காரணமாக யாழ். சிறைச்சாலையில் 304 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
Previous Post Next Post


Put your ad code here