கொட்டகலை - போகாவத்த மாணவி தாக்குதல் சம்பவம் - அதிபர் கைது..!!!




நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தவிடயம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் தின நிகழ்வுக்காக தனது சகோதரன் 300 ரூபாய் செலுத்தவில்லை என தெரிவித்து, குறித்த அதிபர் மாணவியின் சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனையடுத்து “சேர் எனது சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்ட வேண்டாம் என்றும் தனது தந்தை அருகில் வேலை செய்வதால் அவரிடமிருந்து பணத்தை வாங்கி தருவதாக” குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே அதிபர் குறித்த மாணவியை பிரம்பால் அமானுஷ்யமாக தாக்கியதாகவும் இதனையடுத்து பாடசாலைக்கு அருகில் வேலை செய்துக்கொண்டிருந்த மாணவியின் தந்தை, மகளின் அலறல் கேட்டு, பாடசாலைக்கு ஓடி மாணவியைக் காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்கான மாணவியுடன் தனக்கு 4 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்த அத்தந்தை பொருளாதார பிரச்சினையில் தான் இருப்பதுடன், தனது மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன், தனது மகள் தாக்கப்பட்டமை தொடர்பில் திம்புளபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடையும் செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் வினவியபோது, ஒழுக்கம் விடயமாகவே குறித்த மாணவியை சிறு தடியொன்றில் தாக்கியதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே மாணவியின் வாக்குமூலத்தின் பின் அதிபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Previous Post Next Post


Put your ad code here