தங்ஹோவிட சம்பவத்தின் கொள்ளையர்கள் பிடிபட்ட இடம்..!!!



 

தங்ஹோவிட பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள மதுபானசாலையின் பூட்டை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், எதிர்வரும் 14ஆம் திகதி சந்தேகநபர்கள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நேற்று (02) அதிகாலை இரண்டு மணியளவில் தங்ஹோவிட பிரதேசத்தில் உள்ள மதுபானசாலை ஒன்றில் கொள்ளையடிக்க சிலர் வந்துள்ளதாக பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதன்படி, பொலிஸார் விரைந்து சம்பவ இடத்தை சென்றடைந்துள்ள நிலையில், கொள்ளையர்கள் தாங்கள் வந்த காரில் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

இதன்போது கொள்ளையர்களை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.

எனினும், குறித்த வீதியில் பயணித்த பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, ​​குறித்த பெண் கஹடகஸ்திகிலியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தின் பின் இருக்கையில் இருந்துள்ளார்.

இந்துருவவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் பணிபுரிந்து வரும் அவர், இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் சுற்றுலா நிர்வாகத்தில் பட்டம் பெற்றவர்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் போது கொள்ளையர்கள் தப்பிச் சென்றதுடன், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட காரை எடேரமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு கொள்ளையர்களும் காயமடைந்தனர்.

வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அக்பார் டவுன், வத்தளை மற்றும் உஸ்வெடகெய்யாவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post Next Post


Put your ad code here