தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்துடன் யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை உடன்படிக்கை..!!!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் இலங்கைக் கிளையும் இணைந்து மேற்கொள்ளவுள்ள ஜனநாயகம் – கோட்பாட்டிலிருந்து நடைமுறை’ வரை என்னும் தலைப்பிலான சான்றிதழ் கற்கை நெறி மற்றும் ‘அவள் தலைமையில்’ என்னும் தலைப்பிலான வலுவூட்டல் செயற்திட்டம் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கைகைள் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (11) செவ்வாய்க்கிழமை, காலை 9 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சபை அறையில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் சார்பில் அதன் இலங்கை நாட்டுக்கான பிரதிப் பணிப்பாளர் லசந்தி டஸ்கோனும் இவ்விரு புரிந்துணர்வு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டனர்.

இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும், கலைப்பிடத்தின் பதில் பீடாதிபதியுமான பேராசிரியர் சி. ரகுராம், சட்டத்துறைத் தலைவர் திருமதி எஸ். துஷானி மற்றும் விரிவுரையாளர்கள், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனப் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

முதலாவது உடன்படிக்கையின் பிரகாரம் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் அனுசரணையுடன் ‘ஜனநாயகம் – கோட்பாட்டிலிருந்து நடைமுறை’ வரை என்னும் தலைப்பிலான சான்றிதழ் கற்கை நெறியொன்றை விருப்ப வெளிப்படுத்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட முப்பது சட்டத்துறை மாணவர்களுக்கு வழங்குவதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கற்கை நெறியின் மூலமாக ஜனநாயக மேம்பாட்டில் குடிமக்கள் மற்றும் சிவில் சமூகத்தின் பங்களிப்பு முதலான சமூகம் சார் கோட்பாடுகள் தொடர்பான அறிமுகம் வழங்கப்பட எதிர்பார்க்கப்படுவதோடு மாணவர்களின் மென்திறன்கள், பொதுத் தொடர்பாடல் தகைமைகள் முதலானவற்றை அபிவிருத்தி செய்தலும் மற்றுமொரு நோக்கமாகக் காணப்படுகின்றது.

இரண்டாவது உடன்படிக்கையானது ‘அவள் தலைமையில்’ என்னும் தலைப்பிலான வலுவூட்டல் செயற்திட்டம் ஒன்றை விருப்ப வெளிப்படுத்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட முப்பது சட்டத்துறை மாணவிகளுக்கு வழங்கும் தன்மையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வலுவூட்டல் செயற்திட்டத்தின் நோக்கங்களாக மாணவிகளை அரசியல் மற்றும் சமூக வெளிகளில் தலைமைத்துவத்தை ஏற்பவர்களாக வடிவமைத்தலும் தேவையான திறன் விருத்திக்கு வழிகாட்டுதலும் காணப்படுகின்றன.

ஜனநாயகம் – கோட்பாட்டிலிருந்து நடைமுறை வரை சான்றிதழ் கற்கை நெறியினையும், அவள் தலைமையில் வலுவூட்டல் நிகழ்வினையும் தொடர்ச்சியான தன்மையில் நிறைவேற்றிச் செல்லக்கூடிய உறுதிப்பாட்டுடன் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Previous Post Next Post


Put your ad code here