22.4.2023 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் நின்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் பணம் தேவையான அளவுக்கு வரும். பழைய சிக்கல்களைப் பேசி தீர்ப்பீர்கள். குடும்பத்தில் அனைவரோடும் மனம் விட்டுப் பேசுவீர்கள்.
கலையிலும் கல்வியிலும் நாட்டம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே... எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து முடிவெடுக்கும் உங்களுக்கு வரும் 2023 ஆங்கிலப் புத்தாண்டு எவ்வாறு அமையும் என்று பார்ப்போம்.
உங்கள் யோகாதிபதி சுக்கிரன் 5-ம் வீடான மகரத்தில் சஞ்சாரம் செய்யும்போது இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே மனதில் அசாத்தியத் துணிச்சல் பிறக்கும். எதையும் சாதிக்கும் வல்லமை தேடி வரும். எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கைக்கு வரும். பேச்சில் இனிமை பிறக்கும். குடும்பத்தில் இருந்து வருத்தங்கள் நீங்கி அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். உங்கள் மனம் மகிழும்படி நடப்பார்கள்.
திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்குத் திருமண வாய்ப்புகள் தேடிவரும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். மனைவிவழியில் இருந்த பிரச்னைகள் நீங்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரித்த வண்ணம் இருக்கும். பயணங்கள் அடிக்கடி மேற்கொள்ள வேண்டிவரும். அவ்வப்போது பணப்பற்றாக்குறை வந்துபோகும்.
குருபகவான் சஞ்சாரம் எப்படி?
22.4.2023 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் நின்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் பணம் தேவையான அளவுக்கு வரும். பழைய சிக்கல்களைப் பேசி தீர்ப்பீர்கள். குடும்பத்தில் அனைவரோடும் மனம் விட்டுப் பேசுவீர்கள். தடைப்பட்ட திருமணப் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். கடன்களை அடைக்க வழிபிறக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சேமிப்பு அதிகரிக்கும். உறவினர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். தாய்வழியில் அனுகூலம் உண்டாகும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.
23.4.2023 முதல் குருபகவான் அஷ்டம குருவாக மேஷ ராசியில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் திடீர் செலவுகள் வந்து போகும். பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் வரும் சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதாக்க வேண்டாம். சித்தர் பீடங்களுக்குச் சென்று வழிபடுங்கள். எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் தாமதமாகும். இரத்த அழுத்தம், சளித்தொந்தரவு, இனந்தெரியாத கவலைகள் வந்து போகும். கர்ப்பிணிகள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
சனிபகவான் சஞ்சாரம் சாதகமா?
உங்கள் பூர்வ புண்ணியாதிபதி சனிபகவான் 5-ம் வீட்டிலேயே தொடர்வதால் சின்னச் சின்னப் பிரச்னைகள் இருந்த வண்ணம் இருக்கும். சின்னசின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். எவ்வளவு பணம் வந்தாலும் கடன் அடைக்க முடியாத நிலை இருந்துகொண்டு இருக்கும். 29.3.2023 முதல் 23.8.2023 வரை சனிபகவான் அதிசாரமாக 6 - ம் வீடான கும்ப ராசியில் சென்று சஞ்சாரம் செய்ய இருப்பதால் நிலைமை கட்டுக்குள் வரும். எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் வாய்க்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும்.
ராகு - கேது தரும் பலன்கள்
8.10.2023 வரை 2--ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் மனதில் ஏதேனும் ஒரு கவலை இருந்துகொண்டே இருக்கும். பேசும் சொற்களில் கவனம் தேவை. வார்த்தைகளால் வம்பு வரலாம். 9.10.2023 முதல் வருடம் முடியும்வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் அமர்வதால் ஆன்மிக விஷயங்களில் மனம் செல்லும். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள் திடீர் பயணங்கள் ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற சந்தேகம் வந்து சிறு பிரச்னை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
வியாபாரம்: சோர்ந்து இருந்த வியாபாரிகள் புத்துணர்ச்சி பெறுவார்கள். பழைய கடையைப் புதுப்பித்து வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். சலுகைகளை அறிவித்துப் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். ஆகஸ்டு, செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு.
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். கண்ணாடி, துணி, ரியல் எஸ்டேட், பெட்ரோல், டீசல் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வருவார்கள்.
உத்தியோகம்: வேலை பார்க்கும் இடத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடிவரும். வர வேண்டிய சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். புது அதிகாரி உங்களுக்கு உரிய மரியாதையைத் தருவார். பதவியுயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சம்பளம் கூடும். பிப்ரவரி, மார்ச், ஆகஸ்டு மாதங்களில் பெரிய வாய்ப்புகள் தேடி வரும். கௌரவப் பதவிகள் கிடைக்கும்.
இந்த 2023-ம் ஆண்டு தனிப்பட்ட வாழ்விலும் பொருளாதாரத்திலும் வளர்ச்சியையும், செல்வாக்கையும் தருவதாக அமையும்.
Tags:
Rasi Palan