யாழில். தாலிக்கொடியில் மோசடி; 7 வருடங்களின் பின்னரே தெரியவந்தது..!!!


தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி, மற்றும் கொடி செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 2016ஆம் ஆண்டு தாலி மற்றும் அதற்கான கொடி என்பவற்றை ஐந்தரை பவுணில் செய்தவற்கு, சந்தேகநபரிடம் பணம் கொடுத்து , தாலி மற்றும் கொடியினை செய்து பெற்றுக்கொண்டுள்ளனர்.

7 வருடங்களின் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னரே தமது தாலி மற்றும் கொடி என்பவை தங்கம் அல்ல பித்தளை என்பதனை கண்டறிந்துள்ளனர்.

அது தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர் தலைமறைவாகி இருந்தார்.

இந்நிலையில் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் தலைமறைவாகி இருந்த சந்தேக நபரை கைது செய்து, மேலதிக விசாரணைக்காக தெல்லிப்பளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதேவேளை யாழில். கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி மற்றும் கொடி செய்து கொடுத்து ஏமாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகி இருந்தது.

இந்துக்களின் திருமணங்களின் போது , தாலி மற்றும் கொடி என்பவை திருமணத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் "பொன் உருக்கு" என நிகழ்வு ஏற்பாடு செய்து , தாலிக்கொடி செய்து கொள்வார்கள். அத்துடன் தாலிக்கொடி வணக்கத்திற்கு உரியதாகவும் , மரியாதைக்கு உரியதாகவும் பார்க்கின்ற வழக்கமும் உண்டு. அதனால் அவற்றை தங்கம் தானா ? என சோதனை செய்து பார்க்கும் வழக்கம் இருப்பதில்லை.

பொருளாதார நெருக்கடிகளால் அடகு வைப்பதற்காகவோ அல்லது பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகவோ வங்கிகளுக்கு கொண்டு செல்லும் போதே அங்கு தாலி மற்றும் கொடியின் தரம் சோதிக்கும் போதே ,அவற்றில் மோசடிகள் இடம்பெற்று இருந்தால் தெரியவரும் சூழல் காணப்படும்.
Previous Post Next Post


Put your ad code here