சென்னை வந்த சேகுவேராவின் மகள், பேத்திக்கு அமோக வரவேற்பு..!!!


உலக அளவில் இன்று வரை அதிக மக்களால் கொண்டாட்டப்பட்டு வருபவர் புரட்சியாளர் எர்னெஸ்டோ சேகுவேரா. அர்ஜெண்டினாவில் பிறந்த இவர், கியூபாவில் ஏற்பட்ட புரட்சியின் முகமாக அறியப்படுகிறார். முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிரான கடும் போராட்டங்களை முன்னெடுத்த சேகுவேரா, கியூபாவின் தொழில்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார்.

சேகுவேராவின் மறைவிற்குப் பிறகும், உலக நாடுகளில் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் அவரது கொள்கைகளும், கருத்துக்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியாவிலும் சேகுவேராவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

இந்நிலையில் சேகுவேரா மகள் அலைடா குவேரா, பேத்தி எஸ்டெபானி குவேரா ஆகியோர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு சென்னை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த நிர்வாகி ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், சாமுவேல் ராஜ், மாவட்ட செயலாளர்கள் சுந்தரராஜன், வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு சேகுவேராவின் மகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.







Previous Post Next Post


Put your ad code here