யாழில் வயோதிப தம்பதியிடம் நூதன மோசடி; மக்களே அவதானம்..!!!


யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் தனித்து வசிக்கும் முதியவர்களிடம் நூதன மோசடி நடந்துள்ளது.

வயோதிபத் தம்பதியின் வீட்டிற்கு கடந்த வாரம் சென்ற அரச உத்தியோகத்தர் போல தோன்றும் விதமாக ஆடையணிந்திருந்த நபரொருவர், அப்பிரதேசத்தின் சமுர்த்தி உத்தியோகத்தராக புதிதாக நியமனம் பெற்றவர் தானென குறிப்பிட்டு, அந்த முதியவர்களிற்கு சமுர்த்தி கொடுப்பனவு கிடைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதோடு சமுர்த்தி பயனாளியாக இணைக்க வேண்டுமென குறிப்பிட்டு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமுர்த்தி பயனாளியாகுவதற்கு 30,000 ரூபா செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவ்வளவு பணம் தம்மிடமில்லையென முதியவர்கள் தெரிவித்த போது, பணத்தொகையை படிப்படியாக குறைத்து, இறுதியில் 5,000 ரூபா செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து முதியர்கள் 5,000 ரூபா செலுத்தியுள்ளனர். குடும்பத்தினரின் கையெழுத்தை பெற்றுக்கொண்டு புறப்பட்டு சென்ற நபர், சற்று நேரத்தில் மீண்டும் திரும்பி வந்து 5,000 ரூபா பணம் போதாது என்றும், மேலும் 5,000 ரூபா செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த தம்பதியினர், இது பற்றி மகனிடம் பேசுங்கள் என குறிப்பிட்டு, வீட்டுக்குள் மகன் இருப்பதை போல பாவனை செய்து, அவரை அழைத்த நிலையில் சந்தேக நபர் வெளியே ஓடி மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

அதேசமயம் யாழில் அண்மைகாலமாக குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் மக்கள் இவ்வாறானவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.
Previous Post Next Post


Put your ad code here