பெந்தர ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற பெண்ணொருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் எல்பிட்டிய, ஊரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளதோடு, இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, தனது 9 வயது மகன் மற்றும் ஒன்றரை வயது மகள் ஆகிய இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வந்த குறித்த பெண், பெந்தர பாலத்தில் அவர்களை அமர்த்திவிட்டு, சுமார் 40 அடி உயரத்தில் இருந்து நீருக்குள் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
நேற்று (26) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த குறித்த பெண்ணை, அருகில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் காப்பாற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த பெண் பலபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட குறித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கட்டுள்ளது.
அவரது இரண்டு குழந்தைகளும் அளுத்கம பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் அதிகாரிகளின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் கணவர் வசிக்கும் எல்பிட்டிய பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, வீடு திரும்ப வேண்டாம் என குறித்த பெண்ணுக்கு கணவன் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தமையே பாலத்தில் இருந்து குதித்தமைக்கான காரணம் என தற்போது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்தே, அவர் குறித்த முடிவை எடுத்துள்ளதாக, பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
Tags:
sri lanka news