யாழில் இருந்து மாடுகளை கடத்திய கொழும்பு வாசிகள் உள்ளிட்ட மூவர் கைது..!!!


யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சட்டவிரோதமான முறையில் மாடுகளை கொண்டு சென்ற கொழும்பு வாசிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , ஒரு மாடு உயிரிழந்த நிலையிலும் மேலும் நான்கு மாடுகள் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளன.

பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வளலாய் பகுதியில் சனிக்கிழமை இரவு வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பலாலி பொலிஸார் , சந்தேகத்திற்கு இடமான பட்டா ரக வாகனம் ஒன்றினை வழிமறித்து சோதனை இட்டுள்ளனர்.

அதன் போது அந்த சிறிய வாகனத்தினுள் இடவசதிகள் இன்றி ஐந்து மாடுகளை மிக நெருக்கமாக , மாடுகளை சித்திரவதைக்கு உட்படுத்தி , சட்டவிரோதமான முறையில் கொழும்புக்கு கடத்தி செல்லப்படுவதை கண்டறிந்தனர்.

அதனை அடுத்து வாகனத்தில் இருந்த கொழும்பு - 14 பகுதியை சேர்ந்த இருவரையும் அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த ஒருவரையும் கைது செய்தனர்.

அத்துடன் வாகனத்தினையும் , அதனுள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த மாடுகளையும் பொலிஸார் மீட்டனர். அதன் போது ஒரு மாடு உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை வலிகாமம் பகுதிகளில் கால்நடை திருட்டுக்கள் அதிகரித்து உள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலைகளில் குறித்த மாடுகள் களவாடப்பட்ட மாடுகளாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here