Friday 10 March 2023

யாழ். மத்தியின் அசத்தல் பந்துவீச்சால் தோல்வியை தவிர்க்க போராடும் சென் ஜோன்ஸ்..!!!

SHARE

யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு எதிரான 116வது வடக்கின் பெரும் சமரில் யாழ். மத்தியக் கல்லூரி அணி சகலதுறையிலும் பிரகாசித்து இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலைப்பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் 279 ஓட்டங்களை பெற்றிருந்த யாழ். மத்தியக் கல்லூரி அணி, சென் ஜோன்ஸ் கல்லூரியை அவர்களுடைய முதல் இன்னிங்ஸில் 127 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியதுடன், மீண்டும் போலவ் ஒன் முறையில் 137 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளையும் சாய்த்து முன்னிலைப்பெற்றுள்ளது.

முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு எபனீசர் ஜெசில் மற்றும் அணித்தலைவர் கமலபாலன் சபேசன் ஆகியோர் இன்றைய தினம் சிறந்த இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பினர்.

தங்களுடைய இணைப்பாட்டத்தால் மத்தியக் கல்லூரிக்கு இவர்கள் சவால் கொடுத்ததுடன், சென் ஜோன்ஸ் கல்லூரி 100 ஓட்டங்களை கடந்தது. எனினும், இருவருக்கும் இடையில் 81 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெறப்பட்ட நிலையில், எபனீஷர் ஜெசில் 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆனந்தன் கஜனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய சங்கீத் ஸ்மித் அதே ஓவரில் ஓட்டங்களின்றி ஆட்டமிழக்க சென் ஜோன்ஸ் கல்லூரியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிக்கப்பட்டன. சங்கீத் மற்றும் எபனீஷர் ஆட்டமிழந்த அடுத்த இரண்டு ஓவர்களில் அணித்தலைவர் சபேசனும் (34 ஓட்டங்கள்) ஆட்டமிழக்க மதியபோசன இடைவேளையின்போது சென் ஜோன்ஸ் கல்லூரி 119 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

மதியபோசன இடைவேளையின் பின்னர் களமிறங்கிய சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு எந்தவொரு துடுப்பாட்ட வீரரும் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதற்கு பங்களிப்பு வழங்காத நிலையில் 51.2 ஓவர்கள் நிறைவில் 127 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் ரஞ்சித்குமார் நியூற்றன் 4 விக்கெட்டுகளையும், ஆனந்தன் கஜன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் போலவிங் ஒன் முறையில் 152 ஓட்டங்கள் பின்னடைவில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென் ஜோன்ஸ் அணிக்கு மீண்டும் எதிர்பார்க்கப்பட்ட ஆரம்பம் கிடைக்கவில்லை. எதிர்பார்க்கப்பட்ட துடுப்பாட்ட வீரர்களான அண்டர்சன் சச்சின் கணபதி மற்றும் மகேந்திரன் கிந்துசன் ஆகியோர் குறைந்த ஓட்டங்களின்றி ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

போலவிங் ஒன் முறையில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென் ஜோன்ஸ் அணி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறத்தொடங்கியது. எனினும் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய எபனீஷர் மற்றும் கமலபாலன் ஜனாதன் ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்ப தொடங்கினர். இதன்மூலம் தேநீர் இடைவேளையின்போது சென் ஜோன்ஸ் கல்லூரி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 52 ஓட்டங்களை தொட்டது.

தேநீர் இடைவேளைக்கு பின்னர் களமிறங்கிய சென் ஜோன்ஸ் அணிக்கு இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கான கட்டாயம் ஏற்பட்டிருந்தது. அதற்காக விக்கெட்டுகளை தக்கவைத்துக்கொண்டு ஓட்டங்களை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை இருந்தபோதும், மத்தியக் கல்லூரியின் பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி அழுத்தம் கொடுத்தனர்.

மத்தியக் கல்லூரியின் விக்னேஷ்வரன் பாருதி மிகச்சிறப்பாக பந்துவீச, தேநீர் இடைவேளையின் பின்னரும் தொடர்ச்சியாக சென் ஜோன்ஸ் கல்லூரி அணி விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. இதன்மூலம் இன்றைய ஆட்டநேர நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை சென் ஜோன்ஸ் கல்லூரி பெற்றுக்கொண்டுள்ளது.

சென் ஜோன்ஸ் கல்லூரியின் 7வது விக்கெட் 106 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டபோதும் அருள்சீலன் 22 ஓட்டங்களையும், யோகதாஸ் விதுசன் 12 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்ட இன்னிங்ஸை நகர்த்திவருகின்றனர். பந்துவீச்சில் விக்னேஷ்வரன் பாருதி 4 விக்கெட்டுகளையும், நியூற்றன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை சென் ஜோன்ஸ் கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்டநேர நிறைவில் மத்தியக் கல்லூரியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 15 ஓட்டங்கள் பின்னடைவை சந்தித்துள்ளது. எனவே இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கு கட்டாயம் 15 ஓட்டங்கள் தேவை என்பதுடன், போட்டியை சமப்படுத்துவதற்கு நாளைய தினம் நீண்ட இன்னிங்ஸ் ஒன்றை ஆடவேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளப்பட்டுள்ளது.

சுருக்கம்

யாழ். மத்தியக் கல்லூரி – 279/10 (66.2), அஜய் 74, விதுசன் 71, விதுசன் 70/4, அபிசேக் 67/3

யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 127/10 (51.2), எபனேஷர் 43, சபேசன் 34, நியூற்றன் 27/4, கஜன் 8/3

யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 137/7 (42), எபனேஷர் 25, அருள்சீலன் 22*, பாருதி 50/4, நியூற்றன் 41/3

முடிவு – யாழ். மத்தியக் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களால் முன்னிலை

படங்கள்: ஐ.சிவசாந்தன்

































SHARE