அஷ்டமதியாபதியான குரு 12-ல் மறைவதால் எதிர்பாராத வகையில் முன்னேற்றமும் சில நேரங்களில் எதிர்பார்த்த வகையில் ஏமாற்றமும் ஏற்படும்.
எதிர்மறை எண்ணங்களுடன் வருபவர்களை ஆற்றுப்படுத்தி நேர்வழியில் கொண்டு செல்லும் ரிஷப ராசி அன்பர்களே... பனியா, வெயிலா என்று பார்க்காமல் என்கடன் பணி செய்து கிடப்பதே என்று இடைவிடாமல் உழைப்பவர்கள் நீங்கள்தான்.
எல்லோரையும் சமமாக நேசிக்கும் உங்களுக்கு இதுவரை ராசிக்கு லாப வீட்டில் இருந்து ஓரளவு பணப்புழக்கத்தையும், வசதி வாய்ப்பையும், பிரபலங்களின் அறிமுகத்தையும் கொடுத்து வந்த குரு பகவான் 22.4.2023 முதல் 1.5.2024 வரை உங்களின் விரைய வீடான 12-ம் வீட்டில் சஞ்சாரம் செய்து பலன் தர இருப்பதால் செலவுகளைச் சுருக்கப்பாருங்கள். உறவினர்கள், நண்பர்களுக்கு மத்தியில் நம் கௌரவம் என்னாவது என்று பெருமைக்காகக் கைக்காசை கரைக்காதீர்கள். என்றாலும் அஷ்டமதியாபதியான குரு 12-ல் மறைவதால் எதிர்பாராத வகையில் முன்னேற்றமும் ஆனால் எதிர்பார்த்த வகையில் ஏமாற்றமும் ஏற்படும்.
புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் சாதாரண விஷயத்திற்கெல்லாம் சண்டைப் போட்டுக் கொள்ளாதீர்கள். வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளை அரவணைத்துப் போங்கள். அந்தரங்க விஷயங்களில், உள்விவகாரங்களில் மூன்றாம் நபர் தலையீட்டைத் தவிர்க்கப்பாருங்கள். உங்களிடம் இருக்கும் தவறான பழக்கங்களை வாழ்க்கைத்துணை சுட்டிக் காட்டத்தான் செய்வார். திருத்திக் கொள்ளப்பாருங்கள். உடனே முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள்கூட இழுபறியாகி முடியும். யாரையும் நம்பி எதையும் ஒப்படைக்க வேண்டாம். எல்லாவற்றிலும் உங்களின் நேரடி கவனம் இருப்பது நல்லது. உறவினர்களில் சிலர் முகத்துக்கு முன்னால் புகழ்ந்தும் முதுகுப்பின்னால் இகழ்ந்தும் பேசுவார்கள்.
குருபகவானின் பார்வைப் பலன்கள்
குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாய்வழி உறவினர்களால் உதவியுண்டு. பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். வெகுநாள்களாக வீடு வாங்கும் திட்டம் ஒரு கனவாகவே இருந்ததே, அது இப்போது நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தைப் புரிந்து கொள்ளாமல் அலைக்கழித்தார்களே! அதற்காக வருந்தி உங்களிடம் மன்னிப்பு கேட்பார்கள். சாலையைக் கடக்கும் போதிருந்த வாகன பயம் நீங்கும். பழுதான வாகனம் ஓடும். நண்பர்கள், உறவினர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.
உங்களது 6-ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் மறைமுக எதிரிகளை இனங்கண்டு ஒதுக்குவீர்கள். சிலநேரங்ககளில் எதிரிகளாளும் ஆதாயம் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். மூட்டுவலி, இடுப்பு வலி தீரும். இழுபறியான வழக்குகள் இனி சாதகமாக முடியும். வேற்று மொழி பேசுபவர்கள், மதத்தினர்களால் ஆதாயமுண்டு.
குரு உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாடு சென்று வருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் பலர் உங்களுக்குத் தகுந்தாற்போல் பேசி ஏமாற்றினார்களே! அவர்களில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதை இனி உணருவீர்கள். பெரிய பொறுப்புகள் தேடி வரும் என்றாலும் யோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். வழக்கு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை வழக்கறிஞரின் ஆலோசனையின்றி முடிவெடுக்காதீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குல தெய்வக் கோயிலுக்கு அவ்வப்போது சென்று வாருங்கள். அரசு விஷயங்களில் இருந்து வந்த இழுபறிநிலை மாறும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உங்களுக்குள் சின்ன சின்னக் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். கொஞ்சம் மறைமுக எதிர்ப்புகளும் உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். விமர்சனங்கள், வதந்திகள் வரும். அதற்காக அஞ்சவேண்டாம். நீங்களும் தனிநபர்விமர்சனத்தைத் தவிர்ப்பது நல்லது. எளிய யோகாசனங்கள், உடற்பயிற்சிகள் செய்யுங்கள். அக்கம் பக்கம் வீட்டாரிடம் குடும்ப விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
23.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் இக்காலக்கட்டங்களில் உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பணவரவு உண்டு. மருத்துவச் செலவுகள், திடீர் பயணங்கள் வந்து போகும். மகான்கள், சித்தர்களின் நட்பு கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடிப்பீர்கள்.
23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்து பலன் தர இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. செல்வம், செல்வாக்கு உயரும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். புதிய வாகனமும் அமையும். கௌரவப் பதவிகள் தேடி வரும். தடைப்பட்ட கல்யாணம் முடியும்.
17.4.2024 முதல் 1.5.2024 வரை குருபகவான் உங்கள் சுகாதிபதியான சூரியனின் நட்சத்திரத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் அரசால் ஆதாயமடைவீர்கள். ஆனாலும் பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வீட்டைச் சீரமைப்பீர்கள்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்
11.9.2023 முதல் 20.12.2023 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரம் மற்றும் பரணி நட்சத்திரத்தில் வக்ர கதியில் செல்வதால் நீண்ட நாளாகத் தடைப்பட்டு, தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். விலை உயர்ந்த டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், செல் ஃபோன் வாங்குவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். என்றாலும் மறைமுக எதிர்ப்புகள், பணப்பற்றாக்குறை, இனந்தெரியாத கவலைகள் வந்து செல்லும்.
வியாபாரம் : இதுவரை அடைந்த நட்டங்கள், அவமானங்கள் யாவும் நீங்கும். விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். வங்கிக் கடன் பெற்றுப் புது முதலீடு செய்வீர்கள். கடையை நவீனமயமாக்குவீர்கள். வாராக் கடனையும் வாய் ஜாலத்தால் வசூலிக்கப்பாருங்கள். நல்ல பணியாளர்கள் வந்தமைவார்கள். வேலையாட்களை விட்டுப் பிடியுங்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ளும்படி அடிக்கடி அறிவுறுத்துங்கள். கமிஷன், ஏஜென்சி, மருந்து, உர வகைகளால் லாபமடைவீர்கள். இடைத்தரகர்களை நம்பிப் புது வியாபாரத்தில் நுழைய வேண்டாம். ஜூன் மத்தியப்பகுதி முதல் ஆகஸ்டு மத்தியப்பகுதி வரை உள்ள காலக்கட்டத்தில் லாபம் இரட்டிப்பாகும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வரத்தான் செய்யும். நீங்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
வேலை : பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்தாலும், உங்களைக் குறை கூறத்தான் செய்வார்கள். மூத்த அதிகாரிகளிடம் அதிக நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று அவ்வப்போது வருந்துவீர்கள். சக ஊழியர்களிடமிருந்து வீண் விவாதங்கள் வரக்கூடும். செப்டம்பர், மார்ச் மாதங்களில் பதவி உயர்வுக்கு உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது. கணினி துறையினருக்கு வேலை பளு அதிகரிக்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி வரும்.
இந்த குருப் பெயர்ச்சி பணவரவையும், செலவினங்களையும் கலந்துத் தருவதுடன் நிர்வாகத் திறமையையும், பொது அறிவையும் தந்து படிப்படியாக முன்னேற்றத்தையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: மதுரையிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ள குருவித்துறை தலத்துக்குச் சென்று குருபகவானையும் சித்திரதவல்லப பெருமாளையும் வழிபட்டு வாருங்கள்; சகல தடைகளும் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
Tags:
Rasi Palan