கிளிநொச்சியில் வெள்ளைவான் புரளியால் அடித்து நொறுக்கப்பட்டது வாகனம் – மூவர் காயம்..!!! (Video)



வெள்ளைவான் புரளியால் வாகனம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று மாலை கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் வை எம் சி ஏ வீதியில் பொருட்கள் விற்பனை செய்வதற்காக சென்ற வாகனமே பொதுமக்களால் இவ்வாறு மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த வாகனத்தில் பயணித்த மூவரும் பொலிசாரிடம் கிராம அமைப்புக்களால் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த நபர்கள் மூவரும் தமிழ் மொழியில் பேசாமையால் பிரதேச மக்களிற்கு சந்தேகம் ஏற்பட்டு கிராம அமைப்புக்களை அழைத்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்த பிரதேச மக்களால் இதன்போது அமைதியின்மை ஏற்பட்டது. இதன்போது குறித்த நபர்களை தடுத்து வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டது. குறித்த நபர்களை தாக்க முற்பட்டபோது பொது அமைப்புக்கள் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி பொலிசார் வருகை தந்தனர். இதன்போது குறித்த நபர்களை பொலிசார் விசாரணைக்குட்படுத்தியபோது, தாங்கள் வியாபாரத்திற்காக வந்ததாகவும், தம்மை மக்கள் இவ்வாறு தடுத்துள்ளதாகவும் பொலிசாருக்கு தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளிற்காக அவர்கள் பயன்படுத்திய வாகனத்தில் மூன்று நபர்களை அழைத்து செல்ல முற்பட்டபோது பிரதேச மக்களால் அமைதியின்மை ஏற்பட்டது. குறித்த வாகனம் தாறுமாறாக உடைக்கப்பட்டதுடன் உள்ளே இருந்த பொருட்களும் வீசி உடைக்கப்பட்டது.

தொடர்ந்து வாகனத்தில் இருந்த நபர்களும் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டனர். பொலிசாரால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. தொடர்ந்து பொது அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் குறித்த நபர்கள் பொலிசாரின் முச்சக்கர வண்டியில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டனர்.

காயமடைந்த மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.




Previous Post Next Post


Put your ad code here