பிரபல நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து காலமானார்..!!!


தென்னிந்திய தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து இன்று வெள்ளிக்கிழமை (08) காலை மாரடைப்பு காரணமாக தனது 57வது வயதில் காலமானார்.

இவர் 1967இல் தமிழ்நாட்டின், தேனி மாவட்டத்தில் உள்ள பசுமலை கிராமத்தில் பிறந்தார்.

தமிழ்நாட்டின் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிவரும் 'எதிர்நீச்சல்' தொடரில் 'ஆதிகுணசேகரன்' கதாபாத்திரத்தில் நடித்து பல கோடி தமிழர்களின் பாராட்டுக்களை பெற்றவர் மாரிமுத்து.

அந்த தொடருக்காக டப்பிங் பேசி குரல் பதிவு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த போதே மாரிமுத்து மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.

அதனையடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

'எதிர்நீச்சல்’ தொடர் மூலம் பிரபலமான இவர், பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளிவந்த 'ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 'கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

முன்னதாக 'வாலி', 'உதயா', 'கடைக்குட்டி சிங்கம்', 'மாப்ள சிங்கம்', 'பைரவா', 'கொடி', 'மகளிர் மட்டும்', 'எனிமி', 'பரியேறும் பெருமாள்’ போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

'இந்தியன் 2' திரைப்படத்திலும் இவர் சில காட்சிகள் தோன்றி நடித்துள்ளார்.

அண்மைக் காலமாக திரையில் இவர் பேசும் வசனங்களும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உலா வருகின்றன.

இந்நிலையில், மாரிமுத்துவின் மறைவுச் செய்தி தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு என திரை நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here