கிளிநொச்சியில் 423 வியாபார நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கை..!!!


கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வருடத்தில் 423 வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ச.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், “ குறித்த நடவடிக்கையானது கடந்த வருடம் (2023) ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சாதாரண நடவடிக்கைகளின் போதும், கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் 423 வியாபார மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

காலாவதியான பொருட்கள் விற்பனை, கட்டுப்பாட்டு விலைகளை விட அதிகூடிய விலைகளில் பொருட்கள் விற்பனை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டில்லாமை, பொருட்களின் விலைகளில் மாற்றங்களை செய்து விற்பனை, அனுமதிக்கப்படாத அழகுசாதன பொருட்கள் விற்பனை, நிறை குறைந்த பாண் விற்பனை மற்றும் முத்திரையிடப்படாத இலத்திரனியில் பொருட்கள் விற்பனை என பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு, கடந்த வருடத்தில் நிலுவையாக இருந்த வழக்குகள் உட்பட 433 வழக்குகளுக்கு சட்ட நடவடிக்கைகளின் பின்னர் 3,523,000 ரூபா அளவிலான தொகை அபராதமாக நீதிமன்றால் விதிக்கப்பட்டது.

பொதுமக்கள் இது தொடர்பான முறைப்பாடுகளை தங்களுக்கு நேரடியாகவோ அல்லது 1977 என்ற இலக்கத்தின் ஊடாகவோ மேற்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here