ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவிதமான ஜோதிட முறை பின்பற்றப்படுகிறது. அதில் இந்தியாவில் எப்படி மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளைக் கொண்டு ஒருவரது குணாதிசயங்கள், எதிர்காலம் போன்றவை கூறப்படுகிறதோ, அதேப் போல் சீனாவில் எலி முதல் பன்றி வரை விலங்குகளின் அடையாளங்கள் ராசிகளாக கூறப்படுவதோடு, அவற்றைக் கொணடு குணாதிசயங்கள் கூறுப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா கிரிகோரியன் நாட்காட்டியைக் கொண்டு ஜனவரி 01 ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாடுகிறது. ஆனால் சீனப் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் சந்திரனின் சுழற்சியின் படி வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, சீனப் புத்தாண்டு சந்திர நாட்காட்டியால் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் சீனப் புத்தாண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
சந்திர நாட்காட்டியை அடிப்படையாக கொண்ட சீன ஜோதிடத்தில், ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு மிருகத்தைக் குறிக்கிறது. 12 மிருகத்தின் பெயராலேயே ஒவ்வொரு ஆண்டும் அழைக்கப்படுகிறது. 12 வருடங்களுக்குப் பின் மீண்டும் அந்த வருட பெயர் வருவது ஒரு சுழற்சி என கூறப்படுகிறது.
சீன ராசி அடையாளங்கள் என்ன?
சீன ஜோதிடத்தில் 12 ராசியைக் குறிக்கும் விலங்குகளின் அடையாளங்கள் உள்ளன. நீங்கள் எந்த அடையாளம் என்பது ஒரு குறிப்பிட்ட அடையாளத்திற்கான சமீபத்திய சுழற்சியில் நீங்கள் எப்போது பிறந்தீர்கள் என்பதைப் பொறுத்தது. கீழே 12 விலங்கு அடையாளங்களும், அவற்றுடன் தொடர்புடைய ஆண்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நீங்கள் பிறந்த ஆண்டு எந்த அடையாளத்தில் உள்ளதோ, அது தான் உங்களின் சீன ஜோதிட ராசி.
* எலி (1912, 1924, 1936, 1948, 1960, 1972, 1984, 1996, 2008, 2020)
* எருது (1913, 1925, 1937, 1949, 1961, 1973, 1985, 1997, 2009, 2021)
* புலி (1914, 1926, 1938, 1950, 1962, 1974, 1986, 1998, 2010, 2022)
* முயல் (1915, 1927, 1939, 1951, 1963, 1975, 1987, 1999, 2011, 2023)
* டிராகன் (1916, 1928, 1940, 1952, 1964, 1976, 1988, 2000, 2012, 2024)
* பாம்பு (1917, 1929, 1941, 1953, 1965, 1977, 1989, 2001, 2013, 2025)
* குதிரை (1918, 1930, 1942, 1954, 1966, 1978, 1990, 2002, 2014, 2026)
* செம்மறி ஆடு (1919, 1931, 1943, 1955, 1967, 1979, 1991, 2003, 2015, 2027)
* குரங்கு (1920, 1932, 1944, 1956, 1968, 1980, 1992, 2004, 2016, 2028)
* சேவல் 1921, 1933, 1945, 1957, 1969, 1981, 1993, 2005, 2017, 2029)
* நாய் (1922, 1934, 1946, 1958, 1970, 1982, 1994, 2006, 2018, 2030)
* பன்றி (1923, 1935, 1947, 1959, 1971, 1983, 1995, 2007, 2019, 2031)
இப்போது ஒவ்வொரு விலங்கு ராசியைச் சேர்ந்தவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
எலி ராசி குணாதிசயங்கள்
1912, 1924, 1936, 1948, 1960, 1972, 1984, 1996, 2008, 2020 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்களின் சீன ராசி தான் எலி. இந்த அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் லட்சியவாதிகள், வசீகரமானவர்கள், அதிகம் பேசக்கூடியவர்கள். மேலும் மிகவும் சிக்கனமாக செலவழிக்கக்கூடியவர்கள்.
எருது ராசி குணாதிசயங்கள்
1913, 1925, 1937, 1949, 1961, 1973, 1985, 1997, 2009, 2021 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்களின் சீன ராசி தான் எருது. இந்த அடையாளத்தை சேர்ந்தவர்கள் மென்மையான மனதைக் கொண்டவர். கடின உழைப்பாளி, நம்பிக்கையானவர், பொறுமைசாலி, பிடிவாத குணம் கொண்டவர். இலக்கை அடையும் வரை விடாமுயற்சியை கைவிடமாட்டார்கள். பொருள் ஆசை கொண்டிருப்பார்கள்.
புலி ராசி குணாதிசயங்கள்
1914, 1926, 1938, 1950, 1962, 1974, 1986, 1998, 2010, 2022 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்களின் சீன ராசி புலி. இந்த ராசியை சேர்ந்தவர்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டிருப்பார்கள். தைரியசாலி, கவர்ந்திழுக்கும் ஆற்றலைக் கொண்டவர். சற்று திமிருடன் இருப்பார்கள். முக்கியமாக சுயநலமானவர்களும் கூட.
முயல் ராசி குணாதியங்கள்
1915, 1927, 1939, 1951, 1963, 1975, 1987, 1999, 2011, 2023 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்களின் சீன ராசி முயல். இந்த ஆண்டுகளில் பிறந்தவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள், அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள். கலைநயமிக்கவர்கள், ரொமான்டிக்கானவர்கள், முன்கூட்டியே ஒருவரது குணாதிசயங்களைப் பற்றி முடிவெடுத்துவிடுவார்கள். சற்று பயந்த சுபாவம் கொண்டவர்கள்.
டிராகன் ராசி குணாதிசயங்கள்
1916, 1928, 1940, 1952, 1964, 1976, 1988, 2000, 2012, 2024 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்களின் சீன ராசி டிராகன். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக பேசுவார்கள், ஆற்றல்மிக்கவர்கள், தாராள மனப்பான்மை கொண்டவர்கள், புத்திசாலிகள், எதையும் சரியாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் சற்று பொறுமையற்றவர்கள் மற்றும் இவர்களிடம் ஈகோ சற்று அதிகமாக இருக்கும்.
பாம்பு ராசி குணாதிசயங்கள்
1917, 1929, 1941, 1953, 1965, 1977, 1989, 2001, 2013, 2025 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்களின் சீன ராசி பாம்பு. இந்த ஆண்டுகளில் பிறந்தவர்கள் சற்று புத்திசாலி. கவர்ச்சிகரமானவர்கள், திறம்பட செயல்படக்கூடியவர்கள், சற்று அதிகம் பதட்டப்படுவார்கள், பொறாமை குணம் கொண்டிரப்பார்கள்.
குதிரை ராசி குணாதிசயங்கள்
1918, 1930, 1942, 1954, 1966, 1978, 1990, 2002, 2014, 2026 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்களின் சீன ராசி குதிரை. இந்த அடையாளத்தை சேர்ந்தவர்கள் சற்று வேடிக்கையானவர்கள், உற்சாகத்துடன் இருப்பார்கள். சுதந்திரமாக செயல்பட விரும்புவார்கள். பொறுப்பற்றவர்கள், சந்தர்ப்பவாதிகள்.
செம்மறி ஆடு ராசி குணாதிசயங்கள்
1919, 1931, 1943, 1955, 1967, 1979, 1991, 2003, 2015, 2027 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்களின் சீன ராசி செம்மறி ஆடு. இந்த ராசி அடையாளத்தை சேர்ந்தவர்கள் எளிமையானவர்கள், அதிக படைப்பாற்றல் கொண்டிருப்பார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஒழுங்கற்றவர்கள் மற்றும் சரியான சோம்பேறியும் கூட.
குரங்கு ராசி குணாதிசயங்கள்
1920, 1932, 1944, 1956, 1968, 1980, 1992, 2004, 2016, 2028 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்களின் சீன ராசி அடையாளம் குரங்கு. இந்த ராசியை சேர்ந்தவர்கள் புத்திசாலி, அன்பானவர்கள், நம்பிக்கையானவர்கள். தன்னைச் சுற்றியுள்ளவர்களை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்வார்கள். கணிக்க முடியாத அளவில் சற்று ரகசியமானவர்கள்.
சேவல் ராசி குணாதிசயங்கள்
1921, 1933, 1945, 1957, 1969, 1981, 1993, 2005, 2017, 2029 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்களின் சீன ராசி சேவல். இந்த அடையாளத்தை சேர்ந்தவர்கள் சாகச விரும்பிகளாக இருப்பதோடு, தொண்டுகளில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். மேலும் இவர்கள் வேடிக்கையானவர்கள், விசுவாசமானவர்கள். இழுத்துப் போட்டு வேலையை செய்வார்கள். விவாதங்களில் அதிகம் ஈடுபடுவார்கள்.
நாய் ராசி குணாதிசயங்கள்
1922, 1934, 1946, 1958, 1970, 1982, 1994, 2006, 2018, 2030 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்களின் சீன ராசி நாய். இந்த அடையாளத்தை சேர்ந்தவர்கள் உதவும் மனப்பான்மை கொண்டிருப்பார்கள். நேர்மையானவர்கள், சுயநலமற்றவர்கள். ஆனால் அவநம்பிக்கை, கவலை, பயம் போன்றவற்றை அதிகம் கொண்டிருப்பார்கள்.
பன்றி ராசி குணாதிசயங்கள்
1923, 1935, 1947, 1959, 1971, 1983, 1995, 2007, 2019, 2031 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்களின் சீன ராசி பன்றி. இந்த ராசி அடையாளத்தை சேர்ந்தவர்கள் அதிக அக்கறை கொண்டிருப்பார்கள், தாராள மனபான்மை உடையவர்கள், புத்திசாலி, அச்சமற்றவர்கள். ஆனால் இவர்களிடம் பொறுமை சற்றும் இருக்காது.
Tags:
Rasi Palan
