வட்டு இளைஞன் படுகொலை - சந்தேகநபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற மன்று அனுமதி..!!!



யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு ,வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்று , கணவனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளதுடன் , மனைவியை வீதியில் இறக்கி விட்டு சென்று இருந்தனர்

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் இதுவரையில் 09 பேரை சந்தேகத்தில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் நீதிமன்றால் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை , 09 சந்தேக நபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது , சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற பொலிஸார் மன்றில் அனுமதி கோரினர். அதற்கு மன்று அனுமதித்தது.

அத்துடன் , கடற்படை முகாமிற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் கட்டுப்பட்டு தொகுதியை (DVR) இராசயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் பொலிஸார் மன்றில் அனுமதி கோரினர் அதற்கும் மன்று அனுமதித்தது.

அதேவேளை கடந்த 24ஆம் திகதி கைது செய்யப்பட்ட 08ஆம் மற்றும் 09ஆம் சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பு உட்படுத்தவும் பொலிஸார் அனுமதி கோரினர்.

அதன் பிரகாரம் எதிர்வரும் 04ஆம் திகதி அடையாள அணிவகுப்பு திகதியிட்ட மன்று , அன்றைய தினத்திற்கு வழக்கினையும் ஒத்திவைத்தது.

ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களில் நடைபெற்ற அடையாள அணி வகுப்பொன்றில் படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் மனைவி இருவரை அடையாளம் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here