14 வயது மாணவியை கடத்திச் சென்று, சில நாட்கள் மாணவியுடன் தங்கியிருந்த பின் தலைமறைவான குற்றச்சாட்டின் பேரில் 17 வயது இளைஞனை காத்தான்குடி பொலிஸார் இன்று (15) காலை கைது செய்துள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திருகோணமலை முற்றவெளியைச் சேர்ந்த 17 வயது இளைஞன், மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கிரான்குளத்தை சேர்ந்த மாணவியை காதல் என்ற பெயரில் கடத்திச் சென்று, கொழும்பில் சில நாட்கள் தங்கியிருந்துள்ளார்.
அதன் பின்னர், மீண்டும் நேற்று (14) இளைஞன் சொந்த ஊருக்குத் திரும்பி, அவரது வீட்டில் தங்கியிருந்த நிலையில், அவர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளைஞனால் கடத்திச் செல்லப்பட்ட மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news