நல்லூரில் நடைமுறைகளை மாற்றுகிறதா யாழ் மாநகர சபை – வேலன் சுவாமிகள் கோரிக்கை ..!!!


யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோற்சவ காலத்தில் முருகப்பெருமான் வலம் வருகின்ற வெளிவீதிச் சூழலில் புனிதத்தையும், பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு யாழ் மாநகர சபையிடம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் வேலன் சுவாமிகள் மேலும் தெரிவிக்கையில்,
காலங்காலமாக நல்லூர் ஆலய மகோற்சவ காலத்தில் யாழ் மாநகர சபையானது தனது பணிகளை செவ்வனே சிறப்பாக நிறைவேற்றி வந்திருக்கிறது. ஆனால் இவ்வருடம் சிலரின் அழுத்தங்கள் காரணமாக, காலங்காலமாக பேணப்பட்டு வந்த நடைமுறைகளை யாழ் மாநகரசபையானது மாற்ற முயற்சிப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

தன் முன் அனைவரும் சமம் என்ற நல்லூர் கந்தப் பெருமானுடைய தனித்துவத்தை பாதிக்கும் வகையில், ஒருசிலரை முருகப்பெருமான் வலம்வரும் வீதியில் பாதணிகளுடன் அனுமதிப்பது பல்லாயிரக்கணக்கான முருக அடியார்களின் மனதைப் புண்படுத்தும் செயலாகும். அத்துடன் அங்கப்பிரதிஸ்டை செய்கின்ற அடியவர்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும். அத்துடன் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் நடமாடுகின்ற வெளிவீதியில் அத்தியாவசியமான வாகனங்களை தவிர ஏனைய வாகனங்களை அனுமதிப்பது அடியவர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதோடு பக்தர்களிடையே பாகுபாட்டையும் ஏற்படுத்தும்.


ஆகவே காலங்காலமாக பேணப்பட்டு வந்த அதே நடைமுறைகளை இவ்வருட நல்லூர் மகோற்சவ காலத்திலும் நடைமுறைப்படுத்துமாறு யாழ் மாநகரசபையை வேண்டிக்கொள்கிறேன் – என்றார்.
Previous Post Next Post


Put your ad code here