தாக்குதலுக்கு இலக்கான தமிழ் மக்கள் கூட்டணியினருக்கு பிணை..!!!


யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வன்முறை கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த தமிழ் மக்கள் கூட்டணியினரை சேர்ந்த மூவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மன்று அவர்களை பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை நீர்வேலி பகுதியில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியினர் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடங்கிய கும்பல் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து சென்று , மீண்டும் சுமார் 30 பேருடன் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர்

அதில் பெண் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தாக்குதலுக்கு இலக்கானவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், தாக்குதலை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்படும் தரப்பினரும் பரஸ்பர முறைப்பாட்டினை பொலிஸ் நிலையத்தில் வழங்கியிருந்தனர்.

அதனை அடுத்து பொலிஸார் , தாக்குதலுக்கு இலக்காகி யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்களுக்கு வைத்தியசாலையில் கட்டிலுடன் கைவிலங்கிட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான மூவர் மற்றும் தாக்குதலை மேற்கொண்டனர் என குற்றம் சாட்டப்பட்ட ஐவர் என 08 பேரையும் யாழ் . நீதவான் நீதிமன்றில், இன்றைய தினம் திங்கட்கிழமை கோப்பாய் பொலிஸார் முற்படுத்தினர்.

அதன் போது தாக்குதலுக்கு இலக்கானவர்கள் சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி வி. திருக்குமரன் தலைமையில், 12 சட்டத்தரணிகள் மன்றில் தோன்றினர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, அனைவரையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Previous Post Next Post


Put your ad code here