கங்குவா பட எடிட்டர் உயிரிழப்பு..!!!


மலையாளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வெற்றி பெற்ற தல்லுமாலா, உண்டா போன்ற திரைப்படங்களின் எடிட்டராக பணியாற்றிய நிஷாத் யூசுப் தன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு, 43 வயதுதான் ஆகிறது.

நிஷாத் நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ள நடிகர் சூர்யா நடிப்பில், கங்குவா படத்திலும் பணியாற்றி இருந்தார். இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜியுடன் ஒரு படத்திலும் பணியாற்ற ஒப்பந்தமாகியிருந்தார்.

இந்த நிலையில், கொச்சியில் உள்ள பனம்பில்லி நகரில் உள்ள அவரது குடியிருப்பில் இன்று அதிகாலை 2 மணியளவில் சடலமாக கிடந்துள்ளார். அவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

நிஷாத் யூசுப்பின் திடீர் மரணம் குறித்து கேரள திரைப்பட ஊழியர் மற்றும் இயக்குநர்கள் சங்கம் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், “மாறும் மலையாள சினிமாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றிய திரைப்பட எடிட்டரான நிஷாத் யூசுப்பின் எதிர்பாராத மறைவு அதிர்ச்சியளிக்கிறது. திரைப்பட உலகத்தால் இந்த இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நிஷாத்தின் மரணம் மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகினருக்கும் பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. அவரது குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு வெளியான படமான தல்லுமாலாவில் நிஷாத் யூசுப் வித்தியாசமான எடிட் பணிக்காக சிறந்த எடிட்டருக்கான கேரள மாநில விருதைப் பெற்றார். நிஷாத் யூசுப்புக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here