கிளிநொச்சியில் சீரற்ற காலநிலை காரணமாக 248 குடும்பங்கள் பாதிப்பு..!!!
கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 248 குடும்பங்களைச் சேர்ந்த 717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் பிற்பகல் 2.00மணிக்கு பெறப்பட்ட புள்ளிவிபரத் தகவல்களில் குறித்த விடயம் பதிவாகியுள்ளது.
குறித்த பாதிப்புக்கள் தொடர்பாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பிரமந்தனாறு குளம் வான்பாயத் தொடங்கியிருப்பதால் பிரமந்தனாறு குளத்தின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.