போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்..!!!


தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இன்று இடம்பெற்றுவரும் நிலையில் மாவை சேனாதிராஜா வந்தபின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணிக்கு நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் வழமையைவிட அதிகமான மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கூட்டத்தை ஆரம்பிப்பதற்கு செயலாளர் முற்பட்டார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வருகை தராமல் கூட்டத்தை நடாத்த வேண்டாம் என தெரிவித்திருந்தார். இதனால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.

இதன்போது அவர் பதவி விலகிவிட்டார் அவரின் தலைமையில் கூட்டம் நடித்த முடியாது. எனவே உடனடியாக கூட்டத்தை ஆரம்பிக்குமாறு இரா.சாணக்கியன் கடும் தொனியில் தெரிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மாவை சேனாதிராஜாவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்ப்படுத்தி வருவீர்களா என கேட்குமாறு சிவமோகன் தெரிவித்த போது இது ‘கோல் சென்ரர் அல்ல, கட்சி.’ “உங்கள் வைத்தியசாலை அல்ல” இது என்று சாணக்கியன் பதில் அளித்தார். அவர் மாத்திரம் அல்லாமல் ஏனைய சில உறுப்பினர்களும் கூட்டத்தை உடனே ஆரம்பிக்குமாறு கூறினர்.

இதனால் சிவமோகனுக்கும் அவர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தை சிரேஸ்ட உபதலைவர் தலைமையில் உடனடியாக நடத்துங்கள் அல்லாவிடில் குழப்புவர்களை வெளியேற்ற வேண்டிவரும் என பீற்றர் இளஞ்செழியனும் தெரிவித்திருந்தார்.

தனது நிலைப்பாட்டில் சிவமோகனும் விடாப்பிடியாக நின்றமையினால் நீண்டநேரமாக கூட்டம் ஆரம்பிக்கப்படாமல் போர்க்களமாக மாறியது. சிவமோகனுக்கு அருகில் எழுந்துசென்ற சுமந்திரன் அவரை சாமாளிக்கும் பணியில் ஈடுபட்டபோதும் அது பலனளிக்கவில்லை.

இந்நிலையில் 10.45 மணியளவில் கூட்டம் இடம்பெறும் மண்டபத்திற்கு மாவை சேனாதிராஜா வருகை தந்திருந்தார். இதன்போது “உங்கள் தலைமையில் கூட்டத்தை நடத்த முடியாது மாவை ஐயா. எனவே அந்த கதிரையில் இருக்க வேண்டாம் இந்த பக்கம் இருங்கள்” என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவருக்கு தெரிவித்துள்ளார்.

அதனை பொருட்படுத்தாத மாவை சேனாதிராஜா முன்பகுதியில் உள்ள இருக்கையில் சென்று அமர்ந்தார்.

அதன் பின்னர் கூட்டத்தில் அமைதி ஏற்பட்டதுடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

Previous Post Next Post


Put your ad code here