கச்ச தீவு திருவிழா இன்று மாலை ஆரம்பம்..!!!



கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி, நாளைய தினம் சனிக்கிழமை காலை திருப்பலியுடன் முடிவடையவுள்ளது.

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் திருச்செபமாலை ஆரம்பமாகி, தொடர்ந்து திருச்சிலுவை பாதை, திருப்பலி, கருணை ஆராதனை மற்றும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி நடைபெறும்.

நாளைய தினம் சனிக்கிழமை, காலை 6 மணிக்கு திருச்செபமாலை ஆரம்பமாகி, காலை 7 மணிக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருநாள் திருப்பலி இடம்பெற்று, 9 மணியளவில் நிறைவடையும்.

அதேவேளை இலங்கையின் தெற்கு பகுதி சகோதரர்களும் பங்கேற்பதால், சிங்கள மொழியில் மறையுரை உள்ளிட்ட சில வழிபாட்டு பகுதிகள் நடைபெறவுள்ளது.

கொழும்பு மறைமாவட்டத்திலிருந்து அருட்தந்தை சிஸ்வாண்டி குருஸ் சிங்கள மொழியில் மறையுரை ஆற்றவுள்ளார்.

“கச்சத்தீவு திருநாள் புனிதமான ஒரு நிகழ்வு. பக்தர்கள் பக்தியுடன் இறைவனை வழிபட வேண்டும். தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்து, இறை ஆசி பெற அனைவரையும் அழைக்கிறோம்,” என அருட்தந்தை ஜெபரட்ணம் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை நாளைய தினம் சனிக்கிழமை காலை 9 மணிக்கு உணவு வழங்கப்பட்டு, பின்னர் பக்தர்கள் தமது பிரதேசங்களுக்கு திரும்பலாம்.

குடிநீர், உணவு, மலசலகூட வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் தாங்களாக உணவு சமைப்பதற்கோ அல்லது தீ மூட்டுவதற்கோ அனுமதி இல்லை என்றும், தேவையான உணவு வழங்கப்படும்.
Previous Post Next Post


Put your ad code here