மட்டக்களப்பில் மழையால் மீண்டும் போக்குவரத்து பாதிப்பு..!!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (16) காலை தொடக்கம் மழை பெய்து வருவதன் காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக வாழைச்சேனை, கிரான், செங்கலடி, வெல்லாவெளி, போன்ற தாழ்நிலைப் பகுதிகளில் மழைநீர் காணப்பட்ட போதிலும் இன்று பெய்த மழை காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

கிரான், வாகரை, செங்கலடி, போன்ற பகுதிகளில் மக்கள் போக்குவரத்து செய்யும் பிரதான பாதைகள் ஊடாக வெள்ள நீர்த்தேங்கி காணப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கிரான் பகுதியில் கோரகல்லிமாடு, புலிபாய்ந்தகல் போன்ற பகுதிகளைச் சேர்ந்த அங்குள்ள மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்கள் தடைபட்டுள்ளன. இப்பகுதி இராணுவத்தினரின் உதவியுடன் பிரதேச செயலகத்தினால் படகுச் சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் பல ஏக்கர் காணிகளில் தற்போது சிறு போக வேளாண்மை செய்கை ஆரம்பக்கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் இப்பகுதியில் செல்லும் விவசாயிகள், பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை படுவாங்கரைப் பகுதியில் சிறு போக வேளாண்மை செய்கைக்கு தயாராகி இருந்த நெற் காணிகளும் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் விவசாயிகள் பெரும் கவலை தெரிவிக்கின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here